புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.எஸ்.பி விஷ்ணு, இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, கார்த்திகேயன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது, டெலிகிராம் ஆப் இல் வந்த லிங்கில் நாங்கள் கொடுக்கின்ற டாஸ்கை செய்து முடித்தால் நீங்கள் முதலீடு செய்கின்ற பணத்திற்கு மிக அதிக லாபம் தருவோம் என்று கூறியதை நம்பிய ரெட்டியார் பாளையம் கம்பன் நகரைச் சார்ந்த மரிய லூவியா(42) என்ற பெண் 8 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துவிட்டார் என்ற புகாரின் அடிப்படையில் புதுச்சேரி சைபர் கிரைம் ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
“ரெட்டியார்பாளையம் கம்பன் நகரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு டெலிகிராமில் ஒரு லிங்க் வந்துள்ளது. அந்த லிங்கில் உள்ளே சென்று பார்த்த போது நாங்கள் கொடுக்கும் டாஸ்க்களை முடித்தால் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்று இணைய வழி மோசடிக்காரர்கள் சொன்னதை நம்பி முதலில் ரூ. 30,000 முதலீடு செய்துள்ளார். மேற்கண்ட லிங்கில் நாம் முதலில் முதலீடு செய்தால் மட்டுமே உள்ளே சென்று அவர்கள் கொடுக்கின்ற டாஸ்கை பார்க்கவோ அல்லது முடிக்க முடியும். அவர்கள் கொடுத்த டாஸ்கை முடித்த போது அவருடைய அக்கவுண்டில் 43,699 ரூபாய் வருகிறது. அதை நம்பி மேலும் மேலும் ரூ. 8,53,000 முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்து அவர்கள் கொடுத்த டாஸ்க் எல்லாம் முடித்துவிட்டு அவர்கள் கொடுத்த லாபத் தொகையையும் சேர்த்து தன்னுடைய அக்கவுண்டில் இருக்கின்ற பணத்தை எடுக்க முயற்சித்தபோது பணத்தை எடுக்க முடியவில்லை.
மேற்படி லிங்கை அனுப்பிய நபர்களை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இன்னும் நீங்கள் பணம் செலுத்தினால் தான் உங்களுடைய பணத்தை எடுக்க முடியும் என்று கூறவே ஏற்கனவே பல லட்ச ரூபாயை இழந்து விட்டோம். மீண்டும் ஏமாற்றப்படலாம் என்று கருதி இன்று சைபர் காவல் நிலையம் வந்து புகார் அளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு அதிக சம்பளத்தில் வேலை குறைந்த முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று இதுபோன்ற வருகின்ற அனைத்து whatsapp,facebook, telegram, instagram போன்றவற்றில் வருகின்ற அனைத்து விளம்பரங்களும், லிங்குகளும் அனைத்துமே இணையவழி மோசடிக்காரர்கள் ஜோடிக்கப்பட்டு பொதுமக்களை ஏமாற்ற செய்யப்படும் வேலையாகும்.
ஆகவே பொதுமக்கள் இதுபோன்ற டெலிகிராம், வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வருகின்ற லிங்கில் முதலீடு செய்து பணத்தை ஏமாற வேண்டாம். மேலும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எட்டுக்கும் மேற்பட்ட புகார்களில் பொதுமக்கள் 2 கோடி ரூபாய்க்கு மேலான பணத்தை இழந்திருப்பதும், நீங்கள் முதலீடு செய்தாலும் இப்படித்தான் உங்கள் பணத்தை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளனர். பொதுமக்கள் இணைய மோசடி தொடர்பாக விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி