சென்னை மெரினாவில் மழைநீரால் மின்கசிவு ஏற்பட்டதாக பொய்யான தகவலை பரப்பியதாக அ.தி.மு.க நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அண்மையில், ஃபீஞ்சல் புயல் காரணமாக, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால், ஏற்பட்ட மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் வழக்கம்போல, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
இதனிடையே, சென்னை மெரினாவில் பெய்த மழையால் வடியாமல் தேங்கிய மழை நீரில் மின்கசிவு ஏற்பட்டதாக அ.தி.மு.க நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அ.தி.மு.க நிர்வாகி சி.டி.ர். நிர்மல் குமார் வெளியிட்டிருந்த அந்த வீடியோ மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியது. ஆனால், உண்மையில் இந்த சம்பவம், வியட்நாமில் உள்ள கேன் தோ நகரில் நடந்ததாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு நவம்பர் 30-ம் தேதி தெரிவித்தது.
இதையடுத்து, அ.தி.மு.க நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் சமூக வலைதளத்தில் தான் பதிவிட்ட வீடியோவை நீக்கினார்.
இந்நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பொய்யான தகவலைப் பரப்பியதாக அ.தி.மு.க நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“