Chennai Weather Forecast: ஃபனி புயல் இன்று அதிதீவிர புயலாக உருவெடுக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஃபனி புயல் தமிழகத்தில் கரையை கடக்க வாய்ப்பில்லை என்ற நிலையில், புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன், ”தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் வட தமிழகத்தின் கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 1,250 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்துவரும் 24 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கரை அருகில் வரக்கூடும்” என்றார்.
ஃபனி புயல் குறித்த அச்சம் தமிழக மக்களிடம் அதிகளவில் இருந்த நிலையில் ஃபனியால் தமிழகத்திற்கு குறிப்பாக சென்னைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி சென்னையின் தென்கிழக்கே 1,050 கி.மீ. தொலைவில் ஃபனி புயல் நிலை கொண்டுள்ளது. புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும். ஃபனி புயல் இன்று இரவு தீவிர புயலாக மாறி, நாளை அதிதீவிர புயலாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மீனவா்கள், இன்று தென்கிழக்குப் பகுதிக்கும் ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஃபனி புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வலுப்பெற்று அதற்கடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர சூறாவளி புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.