Cyclone Fani: சென்னைக்கு வரவிருந்த ஃபனி திசை மாறி ஒடிசாவுக்குச் சென்று விட்டது.
கடந்த வெள்ளிக் கிழமை அங்கே கரையைக் கடந்தது. இந்திய வானிலை மையம் ஃபனியை தீவிரமாக கண்காணித்து வந்ததால், முன் கூட்டியே 12 லட்சம் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த ஃபனி புயலால் ஒடிசா முழுவதும், பலத்த காற்று வீசியது. பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வலுவான புயலாக ஃபனி உருவாகியிருப்பதாக வானிலை மையம் தெரிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று (மே 4) முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. இது வரும் 29-ம் தேதி வரை நீடிக்கும். ஆக மொத்தம் 26 நாட்களுக்கு மக்கள் கத்தரி வெயிலின் தாக்கத்தை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சாதாரண அக்னி நட்சத்திரத்திலேயே வெயில் கொளுத்தும், ஆனால் தற்போது சென்னைக்கு வர வேண்டிய ஃபனி திசை மாறி சென்று விட்டதால், அதிகளவில் அனல் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கத்தரி வெயிலின் முதல் நாளான நேற்று பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயிலின் தாக்கம் இருந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய இடங்களில் நேற்று பதிவான வெயிலின் அளவு இதுதான்...
சென்னை நுங்கம்பாக்கம் - 101.84 டிகிரி
சென்னை மீனம்பாக்கம் - 103.28 டிகிரி
கோவை - 96.08 டிகிரி
உதகை - 78.44 டிகிரி
கடலூர் - 100.76 டிகிரி
தர்மபுரி - 100.4 டிகிரி
கன்னியாகுமரி - 96.08 டிகிரி
கரூர் - 104.36 டிகிரி
கொடைக்கானல் - 71.96 டிகிரி
மதுரை - 106.16 டிகிரி
நாகை - 102.38 டிகிரி
நாமக்கல் - 99.5 டிகிரி
பாளையங்கோட்டை - 102.92 டிகிரி
சேலம் - 100.76 டிகிரி
தஞ்சை - 95 டிகிரி
திருச்சி - 105.98 டிகிரி
திருத்தணி - 111.2 டிகிரி
தூத்துக்குடி - 91.4 டிகிரி
வால்பாறை - 80.6 டிகிரி
வேலூர் - 109.76 டிகிரி