ஃபீஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றில் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான பல்துறை ஒன்றிய குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணையாற்றில் உருவான பெருமழை வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பகண்டை, மேல்பட்டாம்பாக்கம், அழகியநத்தம், குண்டு உப்பலவாடி, கண்டக்காடு, ஞானமேடு ஆகிய இடங்களில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான பல்துறை ஒன்றிய குழுவினர் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்/ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் திப் சிங் பேடி, வருவாய் நிர்வாக ஆணையர் /கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, அரசு முதன்மைச் செயலாளர் அமுதா, தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் க. நந்தகுமார், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் த. மோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஆகியோர் முன்னிலையில் இன்று (08.12.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பகண்டை மற்றும் மேல்பட்டாம்பாக்கத்தில் தென்பெண்ணை ஆற்றுங்கரை உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் வெள்ளநீர் சூழ்ந்து சேதம் அடைந்துள்ளதையும், கரை உடைப்பினை அடைத்து கரையினை பலப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளையும், மேல்பட்டாம்பாக்கத்தில் பெருவெள்ளத்தின் காரணமாக கஸ்டம்ஸ் சாலையில் ஏற்பட்ட மண்அரிப்பினால் சேதமடைந்துள்ளதையும், அதனை சரிசெய்திடும் வகையில் மணல் மூட்டைகள் அடுக்கி சாலையை செப்பனிடுவதையும், கடலூர் வட்டத்திற்குட்பட்ட அழகியநத்தம் இரண்டாயிரம் விளாகம் சாலையில் பெருவெள்ளத்தினால் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டதையும், தற்காலிகமாக பாலம் சீரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, அழகியநத்தத்தில் வேளாண் பயிர், வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதையும், விவசாயிகளிடம் பயிர்சேதம் குறித்தும், கணக்கெடுப்பு மற்றும் நிவாரணம் வழங்குதல் குறித்தும் கேட்டறிந்தனர். விவசாய நிலப்பரப்பில் மணல் குவியல்கள் ஏற்பட்டுள்ளதையும், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை மூலம் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதனையும், பயிர்சேதம் குறித்து அமைக்கப்பட்ட விளக்க காட்சியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நாணமேட்டில் தென்பெண்ணையாற்று கரை பகுதி உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் மழைவெள்ளம் புகுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும், நீர்வள ஆதராத்துறை மூலம் மணல் மூட்டைகள் அடுக்கி உடைப்பு சரிசெய்திடும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
குண்டுஉப்பலவாடியில் மழைவெள்ளத்தினால் சேதமடைந்த வீட்டினையும், ஆற்றங்கரை பகுதியில் உள்ள வீடு மழை வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளதையும், கண்டக்காட்டில் பெருவெள்ளத்தின் காரணமாக பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்கள் சேதமடைந்துள்ளதையும், சாலை சீரமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, தோட்டக்கலைத்துறை ஆணையர் குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., வேளாண்மைத்துறை இயக்குநர் முருகேஷ் இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் இயக்குநர் இரா.சரண்யா இ.ஆ.ப., பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜானகி, கண்காணிப்பு பொறியாளர் மரியம் சூசை, செயற்பொறியாளர் அருணகிரி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“