வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (சனிக்கிழமை) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை விமான நிலையம் மூடல்
இந்நிலையில், ஃபீஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், சென்னை வரும் மற்றும் இங்கு இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இண்டிகோ மற்றும் விமான சேவை இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், திருச்சி, தூத்துக்குடி, யாழ்ப்பாணம், மதுரை, ராஜமுந்திரி உள்ளிட்ட இடங்களுக்கான பல விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே , கனமழை காரணமாக 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வந்தன. தொடர்ந்து தரையிறங்க முடியாத சூழல் நீடித்தால், வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடபட்டன. குறிப்பாக, அபுதாபியில் இருந்து காலை 8.10 மணிக்கு தரையிறங்க வேண்டிய இண்டிகோ விமானம் சென்னை விமான நிலையத்தில் கனமழை காரணமாக பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/4c85bb57-ee1.jpg)
ஃபீஞ்சல் புயல் காரணமாகப் பெய்து வரும் கனமழையால் சென்னை விமான நிலையம் பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள் மூடல்
இந்நிலையில், ஃபீஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்யும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (நவ.30) திரையரங்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகைக்கடைகள் மூடல்
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அனைத்து நகைக்கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி பேசுகையில், மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதன் காரணமாகவும், கடைகளுக்கு வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும், மழை பாதிப்பு இருக்கக்கூடிய மாவட்டங்களில் உள்ள அனைத்து நகை கடைகளும் இன்று மூடப்படுகிறது என்றும், மொத்தம் 7000 நகைக்கடைகள் இன்று மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“