ஃபீஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு 6,220 நிவாரண பொருட்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி ஆதித்யா செந்தில்குமார் அனுப்பி வைத்தார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சி.பி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது:-
ஃபீஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கடலூர் மற்றும் பணருட்டி வட்டங்களுக்குட்பட்ட கரையோர பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயனைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, நெடுஞ்சாலைத் துறை, நீர் வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் வெள்ள நீர் துரிதமாக அகற்றி, மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இயல்பு நிலை திரும்பிவருகிறது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிடும் வகையில் தஞ்சாவூர், திண்டுக்கல், செங்கல்பட்டு, திருச்சி, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை, நாமக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, கரூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து அரிசி, பருப்பு, மசால பொருட்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள், போர்வை, பாய், பிஸ்கெட், தண்ணீர் பாட்டெல், துணிகள் போன்ற நிவாரண பொருட்கள் வரப்பெற்று. கடலூர் மற்றும் பண்ருட்டி வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து நிவாரண பொருட்கள் பிரித்தனுப்பப்பட்டு வருகிறது.
/indian-express-tamil/media/post_attachments/edf944e7-5e6.jpg)
நிவாரண பொருட்களை பிரித்தனுப்புவதற்கு சார் ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைத்து சுய உதவி குழுவினர்களை கொண்டு 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், போர்வை உள்ளிட்ட பொருட்கள் கொண்ட தொகுப்புகளாக பிரித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடலூர் மற்றும் பண்ருட்டி வட்டங்களுக்கு உட்பட்ட கரிக்கண் நகர் பகுதிக்கு 400 தொகுப்புகளும், செங்காய் நகர் பகுதிக்கு 300 தொகுப்புகளும், மேல் அழிஞ்சிப்பட்டு பகுதிக்கு 550 தொகுப்புகளும், கீழ் அழிஞ்சிப்பட்டு பகுதிக்கு 550 தொகுப்புகளும், உச்சிமேடு பகுதிக்கு 800 தொகுப்புகளும், நாணமேடு பகுதிக்கு 500 தொகுப்புகளும், சுப உப்பலவாடி பகுதிக்கு 150 தொகுப்புகளும், திருப்பணாம்பாக்கம் பகுதிக்கு 1000 தொகுப்புகளும், புதுக்கடை பகுதிக்கு 120 தொகுப்புகளும், குண்டு உப்பலவாடி பகுதிக்கு 1500 தொகுப்புகளும், சிங்கிரிகுடி பகுதிக்கு 350 தொகுப்புகளும் ஆக மொத்தம் 6220 தொகுப்புகள் தற்போது வரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“