ஃபீஞ்சல் புயல் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் 239 இடங்கள் பாதிக்கப்படும் என அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கடலூர் கலெக்டர் சி.பி ஆதித்யா செந்தில்குமார் தீவிரப்படுத்தியுள்ளார்.
தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபீஞ்சல் புயலாக உருவாகியுள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்து வருகிறது. புயல் கரையை கடக்கும் போது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் மழையால் 22 இடங்கள் மிகவும் பாதிக்கக்கூடிய பகுதிகளாகவும், 39 இடங்கள் அதிகமாக பாதிக்கக்கூடிய பகுதிகளாகவும், 20 இடங்கள் மிதமாக பாதிக்கக்கூடிய பகுதிகளாகவும், 158 இடங்கள் குறைவாக பாதிக்கக்கூடிய பகுதிகளாகவும் என மொத்தம் 239 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் கனமழையினை எதிர்கொள்ள ஒவ்வொரு துணைஆட்சியர் அல்லது உதவி இயக்குநர் என 14 மண்டலங்கள், 6 நகராட்சி, 14 பேரூராட்சி, ஒரு மாநகராட்சிக்கு என தனித்தனியே அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் 191 தற்காலிக தங்குமிடங்கள் தயார்நிலையில் உள்ளது. மாவட்டம் முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 30 நபர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் 25 நபர்கள் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் வருகைபுரிந்து தயார் நிலையில் உள்ளனர்.
மழைக்காலங்களில் கால்நடைகளை பாதுகாப்பான முறையில் இடமாற்றம் செய்வதற்கு 1,334 தன்னார்வலர்களும், பேரிடர்கால நண்பன் திட்டத்தில் 300 தன்னார்வலர்களும், 101 மாநில பேரிடர்கால காவலர்களும், 222 நீச்சல் வீரர்களும், 26 பாம்பு பிடிப்பவர்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மழைக் குறித்து தகவல் தெரிவித்திட முதல் தகவல் அளிப்பவர்கள் 4,932 நியமிக்கப்பட்டுள்ளனர்.
உதவி எண்கள்
வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை, தமிழ்நாடு மின்சாரத்துறை, நீர்வளத்துறை, சுகாதாரத்துறை, பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிரவாகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையினை கட்டணமில்லா உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தொலைபேசி எண் 1077, 04142 – 220 700, வாட்ஸ்ஆப் எண் 94899 30520 தொடர்பு கொண்டு, மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் கடலூர் வட்டத்திற்கு 04142 - 295189, 94450-00529, பண்ருட்டி வட்டத்திற்கு 04142 - 242174, 94450-00530, குறிஞ்சிப்பாடி வட்டத்திற்கு 04142 - 258901, 94429-80502, சிதம்பரம் வட்டத்திற்கு 04144 - 227866, 94450-00527, புவனகிரி வட்டத்திற்கு 04144 - 240299, 98423-22044, காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்கு 04144- 262053, 94450-00528, ஸ்ரீமுஷ்ணம் வட்டத்திற்கு 04144 - 245257, 94442-16903, விருத்தாசலம் வட்டத்திற்கு 04143 - 238289, 94450-00531, திட்டக்குடி வட்டத்திற்கு 04143 - 255249, 94450-00532, வேப்பூர் வட்டத்திற்கு 04143 - 241250, 89397-70651 ஆகிய வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வருவாய் வட்டாட்சியர்கள் எண்களுக்கும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை சேர்ந்த 2263 முன்களப்பணியாளர்களும், 274 தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்களும் தயார்நிலையில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் மீட்புப் பணிக்காக 242 ஜே.சி.பி-களும், 104 மரம் அறுக்கும் இயந்திரங்களும், 119 ஜென்செட்கள், 14 பொக்லைன்கள், 12 கிரேன்கள், 22 லாரிகள், 28 ஜெனரேட்டர்கள், 66854 கிலோ பிளிச்சிங் பவுடர் இருப்புகள் தயார்நிலையில் உள்ளன. மேலும், 82,450 மணல் மூட்டைகளும், 14,728 சவுக்கு கட்டைகளும், 82 தேடும் மின் விளக்குகளும் (search light), 512 டார்ச் லைட்களும், 2 ரப்பர் படகுகளும், 4,942 மின் கம்பங்களும், 148 கி.மீ மின் கடத்திகளும், 144 மின்மாற்றிகளும் தயார்நிலையில் உள்ளன. நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 622 டன் அரிசி, 14,000 லிட்டர் மண்ணெண்ணெய் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்படும் அறிவுரையினை தவறாது பின்பற்றிட வேண்டும். மேலும், புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சி.பி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“