தமிழகத்தில் ஃபீஞ்சல் புயல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்த அறிக்கை, மாநில அரசு பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் உள்ள விவரங்களுடன் முற்றிலும் மாறுபட்டுள்ளதாக DT Next செய்தி வெளியிட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 2ம் தேதி புயல் பாதிப்பு மற்றும் நிவாரணம் வேண்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
பேரிடர் மேலாண்மைப் பிரிவின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையால் தயாரிக்கப்பட்ட சேத அறிக்கை டிசம்பர் 4 ஆம் தேதி மாலை 6 மணி நிலவரப்படி இருப்பதாக அமைச்சகம் கூறியது. மேலும், பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் அளித்த தகவலின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக கூறியுள்ளது.
மத்திய அமைச்சகத்தின் அறிக்கையின்படி, தமிழகத்தில் வெள்ள பாதிப்பால் 13 பேர், நிலச்சரிவில் 7 பேர், சுவர் இடிந்து விபத்து, இடி, மின்னல் போன்ற பிற காரணங்களால் 3 பேர், மின்சாரம் தாக்கி 3 பேர் என மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயமடைந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், மனித உயிர் இழப்பு மட்டுமல்லாமல் புயலால் மிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,294 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், டிசம்பர் 2 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் மோடிக்கு எழுதிய கடிதத்தில் இந்த எண்ணிக்கை மாறுபட்டுள்ளது. அதாவது, புயலால் 69 லட்சம் குடும்பங்கள் மற்றும் 1.5 கோடி தனிநபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு புள்ளிவிவரங்கள் கூறி உள்ளது.
மேலும், 2,11,139 ஹெக்டேர் விவசாய மற்றும் தோட்டக்கலை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசின் எண்கள் தெரிவிக்கின்றன, இது உள்துறை அமைச்சக புள்ளிவிவரத்தை விட கிட்டத்தட்ட 12 மடங்கு அதிகம் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“