வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29 ஆ ம் தேதி புயலாக மாறியது. ஃபீஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் நேற்று முன் தினம் இரவு மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது. இந்தப் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்நிலையில், ஃபீஞ்சல் புயலின் கோர தாண்டவத்தால் விழுப்புரம் மாவட்டம் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. நகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குடியுருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். மழை பாதிப்புகளை சீர்செய்யும் பணி நடைபெற்று வருவதால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விடுமுறை இல்லை
கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார். புயல், மழை காரணமாக கடந்த 3 நாட்களாக விடுமுறை விடப்பட்ட நிலையில், நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“