வங்கக் கடலில் உருவான ஃபீஞ்சல் புயல் நேற்று (நவ.31) இரவு மாமல்லபுரம்- புதுச்சேரி அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது. முன்னதாக புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கியது. அதே நேரம் காற்றும் பலமாக வீசியது.
இதன் காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையம் நேற்று சனிக்கிழமை நண்பகல் முதல் 16 மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டது. எதிர் காற்று காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டது.
35 நாட் வேகத்திற்கு மேல் பலத்த காற்று வீசிய நிலையில் முதலில் இரவு 7 மணி வரை விமான சேவை நிறுத்தப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்தது. அதன் பின் தொடர்ந்து மோசமான வானிலை காரணமாக இன்று (டிச.1) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை சேவை நிறுத்தப்படுவதாக அறிவித்தது.
நேற்று மொத்தம் 229 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் விமான நிலையங்களில் தவித்தனர். அதே நேரம் பல விமானங்கள் பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
பிற்பகலில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது சென்னை விமானங்களை ரத்து செய்தது, மேலும் பயணிகள் தங்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியது.
சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், நேற்று 55 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 19 விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன என்று கூறினார்.
தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்குப் பிறகு சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்க்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“