தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள ஃபீஞ்சல் புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. சென்னை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று (நவ.30) புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனினும் புயல் கடக்கும் இடத்தில் மாற்றம் ஏற்படலாம் என தனியார் வானிலை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் X பதிவில், KTCC பகுதியில் சென்னைக்கு மேலே அடர்த்தியான மேகங்கள் உள்ளன. அடுத்த 12 மணிநேரத்தில் KTCC பகுதியில் மேகங்கள் தொடர்வதால் இங்கு அதிக மழை பெய்யும்.
இரவு முதல் காலை 8.30 மணி வரை கே.டி.சி.சியில் 60-120 மிமீ மழை பெய்துள்ளது. அடுத்த 12 முதல் 18 மணிநேரம் இந்தப் பகுதிகளை கவனமாக கவனிக்க வேண்டும்.
சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே மரக்காணம் முதல் மாமல்லபுரம் வரையில் எங்காவது புயல் கரையை கடக்கும். எனினும் புயல் கரையை கடக்கும் நேரம் மட்டும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
பெரும்பாலும் இன்று இரவு முதல் டிசம்பர் 1 அதிகாலை இடையில் புயல் கரையை கடக்கலாம். புயல் கரையை கடக்கும் வரை KTCC பகுதியில் மழை பெய்யும்.
இன்று மாலையில் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 70 கிமீ வரை வீசக்கூடும். இருப்பினும் காற்று அச்சுறுத்தலாக இருக்காது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“