ஃபீஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் இன்று (டிச.3) அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஃபீஞ்சல் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. ஃபீஞ்சல் புயல் கரையை கடந்த நிலையிலும் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.
குறிப்பாக விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. 50 செ.மீ அளவு மழை பதிவானது. இதனால் வீடுகளுக்குள் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தங்களை உடமைகளை இழந்து பெரும் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, கால் நடைகள் உயிரிழப்பு மற்றும் பயிர் சேதத்திற்கும் தமிழக அரசு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. சேதமடைந்த குடிசைகளுக்கு 10,000. முழுவதுமாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட முன்னுரிமை வழங்கப்படும்.
2. 33% அல்லது அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவை பாசனப் பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.17,000 நிவாரணம் வழங்கப்படும்.
3. 33% அல்லது அதற்கு மேல் பாதிக்கப்பட்ட பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22,500 வழங்கப்படும்.
4. மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500.
5. எருது, பசு உயிரிழந்திருந்தால் ரூ.37,500.
6. வெள்ளாடு, செம்மறி ஆட்டுக்கு ரூ.4,000.
7. கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“