கஜ புயல் சேதப் பகுதிகளில் மத்தியக் குழு இன்று ஆய்வு செய்கிறது. முன்னதாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அந்தக் குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள்.
கஜ புயல் உருக்குலைத்து டெல்டா மாவட்டங்களில் நிவாரணப் பணிக்காக ரூ15,000 கோடி நிதியை மத்திய அரசிடம் தமிழ்நாடு கேட்டிருக்கிறது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோளைத் தொடர்ந்து, மத்தியக் குழுவை பிரதமர் மோடி அனுப்பி வைத்தார்.
மத்திய நிதித்துறை இணைச் செயலாளர் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று (நவம்பர் 23) இரவு சென்னை வந்தனர். இன்று (நவம்பர் 24) காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அந்தக் குழுவினர் சந்தித்து பேசினார்கள்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்த முடிவின் படி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையில் இன்று மாலை 5:30 மணிக்கு முதற்கட்ட ஆய்வை தொடங்குகிறது மத்தியக்குழு.
தொடர்ந்து, தஞ்சையில் புயல் சேதத்தை இன்று இரவு 8:30 மணிக்கு ஆய்வு செய்கிறது. பின்னர், நாளை காலை 7 மணிக்கு மீண்டும் தஞ்சையில் ஆய்வு செய்கிறது.
பின்னர், திருவாரூரில் நாளை மாலை 3:30 மணிக்கு ஆய்வு செய்கிறது மத்தியக்குழு. பிறகு, திங்கள் காலை 7:30 மணி முதல் 1 மணி வரை நாகையில் ஆய்வு செய்கிறது. திங்கள் பிற்பகல் 2:30 மணிக்கு காரைக்காலிலும், மாலை 5 மணிக்கு புதுச்சேரியிலும் ஒரே குழுவாக சாலைமார்க்கமாக ஆய்வு செய்கிறது. மொத்தம் 3 நாட்கள் அவர்கள் ஆய்வு செய்ய இருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு, "தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த ஆய்வறிக்கை நவ.27க்கு பிறகு மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றார்.
தமிழக அரசு கேட்டபடி ரூ15,000 கோடி கிடைக்குமா? என்பது அதன்பிறகே தெரியவரும்.