Cyclone Gaja: தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக 60 கி.மீ காற்று இருக்கும். கனமழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீர்நிலைகளை கண்காணிக்க ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. எனினும் கன மழை மிரட்டலுக்கு மத்தியிலும் டெல்டா மாவட்டங்களில் வியாழக்கிழமை (22-ம் தேதி) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
கஜ புயல், கடந்த 16-ம் தேதி அதிகாலையில் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியிருக்கிறது. இன்னமும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு வீடு, உடமைகளை இழந்து தெருவில் நிற்கிறார்கள்.
விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை... பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Read More: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்த நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டிருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘வங்ககடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது மேற்கு நோக்கி நகரும் போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும்.
கடலூர், திருவண்ணாமலை, நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். சென்னையை பொருத்தவரையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடைவெளி விட்டு அவ்வப்போது மழை பெய்யும். மீனவர்கள் தென்மேற்கு வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
Read More: தானேவை விட 10 மடங்கு அதிக பேரிழப்பினை ஏற்படுத்திய கஜ
சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இன்று (நவம்பர் 21) அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கஜ புயல் சேதம், நிவாரணம், புதிய புயல் அபாயம், மழை தொடர்பான புதிய தகவல்கள் இங்கு தொகுக்கப்படுகிறது.
Cyclone Gaja Relief, New Cyclone At Bay Of Bengal, Fresh Alerts: கஜ புயல் நிவாரணம், புதிய புயல் எச்சரிக்கை லைவ்
7:20 PM: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என ஆட்சியர் கணேஷ் கூறினார்.
7:15 PM: சென்னையில் இரவு மழை தொடர்வதை பொறுத்து நாளை காலை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என ஆட்சியர் சண்முக சுந்தரம் கூறினார்.
6:40 PM: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 53 லட்சம் மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளன என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
6:00 PM: கனமழை காரணமாக நாளை நடைபெற இருந்த அனைத்து அரசு சட்டக் கல்லூரி மற்றும் சீர்மிகு சட்டக் கல்லூரி தேர்வுகள், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.
5:00 PM; இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டிசம்பர் 24-ம் தேதி டொரண்டோவில் நடத்த இருக்கும் இசை நிகழ்ச்சி மூலமாக கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை கஜ புயல் நிவாரணமாக வழங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
My Sufi Ensemble and I will perform a benefit concert in Toronto on 24 Dec at Metro Toronto Convention Centre Part of the proceeds will go to for Gaja Cyclone relief in TN I will be joined by Javed Ali, Sivamani & Sana Moussa
Log on to https://t.co/dQwCs6TNu0 for details/tickets
— A.R.Rahman (@arrahman) 20 November 2018
4:55 PM: கஜ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களுக்கு 4000 கிலோ நிலவேம்பு குடிநீர் மருந்து மற்றும் இதர இந்திய வழி மருந்துகளை தமிழக நிறுவனமான டாம்கால் நிறுவனம் அனுப்பிவைத்துள்ளது. இந்தத் தகவலை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்தது.
4:30 PM: கஜ புயல் பாதித்த பகுதிகளில் பாமக சார்பில் ரூ 1 கோடி ரூபாய் மதிப்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியிருக்கிறார்.
3:45 PM: திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இது தொடர்பான அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது.
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் வந்து கொண்டிருப்பதற்கு அனைத்து டெல்டா மாவட்ட மக்களின் சார்பாக நன்றியை தெரிவிக்கின்றோம்.
உங்கள் சேவை தொடரட்டும்.#GajaCyclone #BounceBackDelta pic.twitter.com/zT1Y1wMno1
— TN SDMA (@tnsdma) 21 November 2018
3:35 PM: கஜ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்களை நடிகர் ரஜினிகாந்த் அனுப்பி வைத்தார்.
சென்னையில் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து 6 லாரிகளில் நிவாரணப்பொருட்கள் சென்றன.
3:00 PM: கஜ நிவாரணப் பணிகளுக்காக திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வழங்கினார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வர் மீது சில நாட்களாக கடும் விமர்சனங்களை வைத்ததால் ஸ்டாலின் இந்த சந்திப்பை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவித்தபடி, #CycloneGaja நிவாரண நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை, தி.மு.க. அறக்கட்டளை சார்பில், கழக பொருளாளர் திரு.துரைமுருகன் MLA மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. @PKSekarbabu MLA ஆகியோர் @CMOTamilNadu அவர்களிடம் வழங்கினர். pic.twitter.com/znFCDWsYzK
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) 21 November 2018
2:33 PM: கனமழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீர்நிலைகளை கண்காணிக்க ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
2:25 PM: தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முதல்வர் செந்தமிழ்ச்செல்வி விடுத்துள்ள செய்தியில், ‘புயல் சீரமைப்பு பணிகள் இன்னும் முடியாததால் நிலையில் சனிக்கிழமை (24/11/18) வரை தேர்வுகள் நடைபெறாது’ என கூறியிருக்கிறார்.
1:50 PM: திமுக பொருளாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில், ‘மீட்பு பணிகளில் திமுக அரசியல் பார்க்கவில்லை, அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம். மத்திய அரசிடம் கேட்கின்ற விதத்தில் அதிகாரமுடன், தைரியமாக கேட்டால் தான் கேட்ட நிதியை பெற முடியும்’ என்றார்.
1:05 PM: இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை 8 மணி நிலவரப்படி வெளியிட்ட வானிலை அறிவிப்பு: தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் இன்று கன மழை மற்றும் மிக கனமழை இருக்கும்.
நாளை (22-ம் தேதி) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் கன மழை மற்றும் மிக கன மழை இருக்கும். கேரளாவிலும் மழை வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக 60 கி.மீ காற்று இருக்கும்.
தென்மேற்கு வங்கக் கடலில் தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடல் ஆக்ரோஷமாக இருக்கும். எனவே தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
12:30 PM: புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, தென்மேற்கு வங்கக் கடலில் வடகிழக்கு இலங்கை மற்றும் தமிழ்நாட்டை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.
11:30 AM: கஜா புயல் நிவாரண நிதி கோரி டெல்லியில் பிரதமர் மோடியை நாளை காலை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி. இதற்காக இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். கஜா நிவாரணமாக மத்திய அரசிடம் 13,000 கோடி ரூபாய் நிதியை முதல்வர் கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு முதல்வர்-பிரதமர் சந்திப்புக்கு பிறகே தெரிய வரும்.
இதற்கிடையே தமிழ்நாடு அரசு சார்பில் கஜா நிவாரணமாக முதல்வர் அறிவித்த 1000 கோடி ரூபாய் நிதியை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. 1000 கோடி ரூபாயும் எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு தொகை? என்றும் பிரித்து வழங்கப்படுகிறது.
11:10 AM: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விடுத்துள்ள அறிவிப்பில், ‘கஜ புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை (நவம்பர் 22) பள்ளிகள் திறக்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நாளை மாலைக்குள் புதிய புத்தகங்கள் வழங்கப்படும்’ என கூறியிருக்கிறார்.
10:55 AM: தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கிராம பகுதிகளில் 3 நாட்களில் மின்சாரம் வழங்கப்படும்’ என்றார்.
10:05 AM: சென்னையில் மாநில பேரிடர் மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யும். சென்னையில் தற்போது மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் மொத்தம் 26 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகியிருக்கிறது.’ என்றார்.
டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையால், நிவாரணப் பணிகள் பாதிக்கப்படாது என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
9:30 AM: சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டது. தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சில இன்று வகுப்புகளை நடத்துவதாக அறிவித்திருந்தன. மாவட்ட ஆட்சியர் கட்டாய விடுப்பு அறிவித்ததைத் தொடர்ந்து, பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற அவர்கள் வீடு திரும்பினர்.
9:00 AM: சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குடிநீர் தேவையைப் பொறுத்தவரை சென்னைக்கு இது அவசியமான மழை!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.