வங்கக் கடலில் உருவாகிய கஜ புயல், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நாகை, வேதாரண்யம் பகுதியில் கரையை கடக்க தொடங்கியது. இந்த புயல் இன்று அதிகாலை அதிராம்பட்டினத்தில் முழுமையாக கரையை கடந்தது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
இந்த புயலின் தாக்கத்தினால் தமிழகத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண தொகை அளிக்கப்படும் என்று சேலம் ஓமலூர் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் நிதியுதவியும், சிறிய அளவு காயங்கள் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கஜ புயல் பாதிப்பு குறித்து இன்று சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவகத்தில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அந்த பேட்டியில்,
“தலைமை செயலகத்தில் என் தலைமையில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர், நாகை, கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
இந்த கனமழையால் 11 பேர் இறந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் நிதியுதவியும், சிறு காயமடைந்தவர்களுக்கு 25 ரூபாய் நிதியுதவியும் அளிக்கப்படும். இதுவரை 471 முகாம்களில் 81,948 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளார். முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாலேயே உயிர் சேதம் தடுக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன என்பது கணக்கிடப்பட்டு விரைவில் சரிசெய்யப்படும். அதற்கான நடவடிக்கையை மின்சாரத்துறை எடுக்கும். அதேபோன்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இரவு முழுவதும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்தையும் பார்வையிட்டு வருகிறார். எங்களுக்கும் தொடர்ந்து தகவல் அளித்துக்கொண்டு இருந்தார்”