scorecardresearch

வங்கக் கடலில் புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்த தேதிகளில் மழை

வங்கக் கடலில் வரும் 7-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் 9-ம் தேதி அது புயலாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Latest News on Tamil Nadu Rains
Tamil Nadu Rains News

வங்கக் கடலில் வரும் 7-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 9-ம்தேதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 6-ம் தேதி வளிமண்டலத்தில் காற்றுசுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால் 7-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, 8-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன் பிறகு 9-ம் தேதி புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து மத்திய வங்கக்கடல் நோக்கி வடக்கு திசையில் நகரக்கூடும். இதனால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து வரும் நாட்களில் தெரிய வரும். தற்போது தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. வட தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று மே 4, நாளை மே 5 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 6, 7 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வரும் 5, 6, 7 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 7 டிகிரி ஃபாரன்வீட் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

3-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்கோனாவில் 11 செமீ, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர், கழுகுமலை ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ., ஈரோடு மாவட்டம் தாளவாடி, தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி, திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் தலா 9 செமீ மழை பதிவானது.

அக்னி நட்சத்திரம் தொடக்கம்

கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வருகிறது. குறிப்பாக கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 105 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெப்பம் பதிவானது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் சற்று குறைந்தது.

இதையடுத்து, இன்று(மே 4) முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்குகிறது. இது வரும் 29-ம் தேதி உடன் நிறைவடைகிறது. இதனால் வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும். எனினும், வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் இந்த முறை வெப்பநிலை சற்று குறைவாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Cyclone likely to develop over bay of bengal by may 9