Cyclone Mandous Chennai Airport multiple flights canceled Tamil News: வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்தது. இந்த தீவிர புயலான மாண்டஸ் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. சென்னை மற்றும் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நிறைய இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் இன்றும், நாளையும் மழை பொழியும் என கூறப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகள், அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சீர்படுத்தி வருகின்றனர்.
2-வது நாளாக சென்னையில் விமானங்கள் ரத்து
இந்நிலையில், ‘மாண்டஸ்’ புயல் காரணமாக 2-வது நாளாக சென்னையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்றைய தினம் 25 விமானங்களுக்கு மேலாக சேவையை ரத்து செய்த நிலையில், இன்று மேலும் 19 விமானங்கள் சேவையை ரத்து செய்துள்ளன.
மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கிய நேற்று இரவில் இருந்து, இன்று அதிகாலை வரை, சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 14 விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூர் மற்றும் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. அதில் நேற்று நள்ளிரவு வரையில் 9 விமானங்களும், அதன் பின்பு இன்று அதிகாலை வரையில் 5 விமானங்களும் என மொத்தம் 14 விமானங்கள் ஆகும்.
All Chennai flights are roaming in the sky unable to land ...#CycloneMandous #flights #chennaiairport pic.twitter.com/YKTQRt5viM
— Vineeth Arts (@Vineethkkdist) December 9, 2022
இதேபோல் பெங்களூர், ஹைதராபாத், சிங்கப்பூர், இந்தூர், மும்பை, துபாய், தோகா ஆகிய நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் உட்பட 14 விமானங்கள் அவ்வாறு திரும்பி சென்றன. அதன் பின்பு இன்று அதிகாலையில் இருந்து, அந்த விமானங்கள் பெங்களூர், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வர தொடங்கியுள்ளன.
இன்று இரண்டாவது நாளாக மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் உள்நாட்டு விமானங்களான திருவனந்தபுரம், விஜயவாடா, விசாகப்பட்டினம், கோவை, தூத்துக்குடி, பெங்களூர், ராஜமுந்திரி உள்ளிட்ட 11 புறப்பாடு விமானங்களும், 8 வருகை விமானங்களும் மொத்தம் 19 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 18 விமானங்கள் ஏடிஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள் ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.