Cyclone Mandous – Chennai Airport Tamil News: வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த தீவிர புயலான மாண்டஸ் இன்று இரவு 11:30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘மாண்டஸ்’ புயல் காரணமாக தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலையில் முதல் மழை பெய்து வருகிறது. மேலும் காற்றின் வேகம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்படுகிறது. இந்த மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து நேற்று பகல் 12 மணிக்கு தூத்துக்குடி செல்லும் விமானம், பிற்பகல் 2.25 மணிக்கு சீரடி செல்லும் விமானம், இரவு 7.10 மணிக்கு மங்களூரு செல்லும் விமானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

இதேபோல் தூத்துக்குடியில் இருந்து மாலை 3.35 மணிக்கு சென்னை வர வேண்டிய விமானமும், சீரடியில் இருந்து மாலை 6.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு மங்களூரில் இருந்து வர வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டன. மேலும் சென்னையில் இருந்து மும்பை, மதுரை, தூத்துக்குடி, ஹுப்ளி, கண்ணூர், கோலாலம்பூர், சிங்கப்பூர், இலங்கை, டாக்கா ஆகிய இடங்களுக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய 11 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
இந்நிலையில், ‘மாண்டஸ்’ புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளதால், மோசமான வானிலை, பலத்த காற்று மற்றும் மழை அதிக அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயலின் தக்கம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று 25 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சென்னையில் இருந்து தூத்துக்குடி, மைசூர், கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை, ஹைதராபாத், ஹூப்ளி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளுக்கு விமான சேவை ரத்து தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் வேறு நாட்களில் விமான பயணம் மேற்கொள்ளலாம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#CycloneMandous | Due to heavy rains in #Chennai and parts of #TamilNadu, the #ChennaiAirport has announced the cancellation of a few flights on December 9.
— Express Chennai (@ie_chennai) December 9, 2022
Source: @aaichnairport
Follow live updates: https://t.co/sACErenLoW#ChennaiRains #chennaiweather #TamilNadurains pic.twitter.com/TyExEQ6w3D
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil