அடையாறு திரு.வி.க. பாலத்தின் கீழ் ராட்சத கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அடையாறு நோக்கி வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது.
இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு, குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், புறநகரிலுள்ள பல்வேறு பகுதிகளில் இன்னும், அரசின் உதவி சென்றடையவில்லை.
சென்னையின் பல இடங்களில் தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அடையாறு ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால், சைதாப்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அடையாறு ஆற்றின் கரையோர வீடுகள், கட்டிடங்கள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்து அடையாறு செல்லக்கூடிய திரு.வி.க. பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
திருவிக பாலத்தின் அருகே கழிவுநீர் செல்லக்கூடிய ராட்சத குழாய் ஒன்று செல்கிறது. ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்து பம்ப் செய்யக்கூடிய கழிவுநீர் இங்கிருந்து சென்னை பெருங்குடிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது அடையாறு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரால் உண்டான அழுத்தத்தால் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மேலே செல்லக்கூடிய பாலம் மற்றும் சாலையில் இரண்டு இடங்களில் விரிசல் ஏற்பட்டு அடியிலிருந்து நீர் வெளியேறுகிறது.
இதனால் கிரீன் வேஸ் சாலை, ஆர்.ஏ.புரம், மந்தைவெளியில் இருந்து அடையாறு நோக்கி வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப் படுகின்றன.
பாலத்தில் 2 இடங்களில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குனர் வினய் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“