மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னைவாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மழையின் தீவிரம் ஓரளவு குறைந்தாலும், நகரின் பல பகுதிகள், குறிப்பாக புறநகர் பகுதிகளில், தண்ணீர் தேங்கியது.
தொடர்ந்து 72 மணி நேரம் இணைய இணைப்பு இல்லாமல் இருளில் தவிப்பதாக பல மக்கள் தெரிவித்தனர். அவர்களது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களில் சிலர், 48 மணிநேரமாக சரியான உணவு உட்கொள்ளாததால், அவர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. சில பகுதிகளில் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் 7 கி.மீ.க்கு மேல் மக்கள் தண்ணீரில் அலைய வேண்டியிருந்தது.
சென்னை அருகே, நாராயணபுரத்தில் உள்ள எஸ் கொளத்தூர் சாலையில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. நாராயணபுரம் ஏரியில் இருந்து வரும் தண்ணீரால் இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 65 வயதான புவனா, கடந்த மூன்று நாட்களாக முழங்கால் அளவு தண்ணீரில் வசிப்பதால் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
’என் கணவர் சமீபத்தில் இறந்துவிட்டார், நான் என் இளைய மகளுடன் இங்கு வசிக்கிறேன். யாரும் இங்கு வரவில்லை, யாரும் எங்களுக்கு உதவவில்லை. கடந்த மூன்று நாட்களாக போராடி வருகிறோம். எனக்கு இதய நோய் உள்ளது, நான் மாத்திரைகளை மட்டும் எடுத்துக் கொள்கிறேன், சுற்றிலும் தண்ணீர் இருப்பதால் என் வீட்டிற்குள் இருக்க முடியவில்லை. மாடிப் படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கிறேன். வெள்ள நீரில் டி.வி., ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்துள்ளன. சமையலறையில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களும் பாதிக்கப்பட்டுள்ளன’, என்றார்.
Narayanapuram, S Kolathur Road: Entire area is surrounded by water, residents, esp elderly people are pleading for help. All their belongings are damaged, & they are struggling for the past 3 days without food, connectivity. Immediate help is required. #ChennaiFloods pic.twitter.com/m4iKIctSB8
— Janardhan Koushik (@koushiktweets) December 5, 2023
பால், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக புவனாவின் மகள் அல்லி (40) கூறினார்.
’ஒரு பாக்கெட் பால் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, அதுவும் கிடைக்கவில்லை. எங்கள் வீட்டில் அத்தியாவசியப் பொருள் வாங்க யாரும் இல்லாததால், சிரமப்பட்டு வருகிறோம். தண்ணீர் வடியவும், உணவு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.
அரசு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்காததால், இங்குள்ள பலர் வீடுகளை விட்டு வெளியேறி, அருகில் உள்ள பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர், என்றார் எலக்ட்ரீசியன் சுந்தரேசன் (55).
அதிகாரிகள் யாரும் இங்கு வரவில்லை. எனது வீட்டிற்குள் வெள்ள நீர் வந்துவிட்டது. என் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு உணவு வாங்க வந்துள்ளேன். தண்ணீரில் நடக்கவும் பயமாக இருக்கிறது. எந்த பகுதியில் பாதாள சாக்கடை உள்ளது என்று தெரியவில்லை. சூரியன் மறைந்தவுடன், நிலைமை மோசமாகிவிடும். நாங்கள் மிகவும் வேதனையில் வாழ்கிறோம், என்றார்.
இன்னும் சிலர், கடந்த 24 மணி நேரமாக பாலில் மட்டுமே உயிர் வாழ்வதாகக் கூறினர்.
சென்னை மாநகராட்சியின் கீழ் வரும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பள்ளிக்கரணையில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. ஏஜிஎஸ் காலனி, ராஜேஷ் நகர், காமகோடி நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
காமகோடி நகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் கூறுகையில், நெட்ஒர்க் இல்லாததால், அவசர காலங்களில் யாரையும் தொடர்பு கொள்வது கடினமாக உள்ளது.
30-40க்கும் மேற்பட்ட வில்லாக்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் இங்கு அமைந்துள்ளன மற்றும் இப்பகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. காமாக்ஷி நகரைச் சேர்ந்த சிலர் மறுவாழ்வு மையங்களுக்குச் சென்றுள்ளனர், மேலும் பலர் வேறு வழியின்றி சிக்கித் தவிக்கின்றனர்.
இப்போது அதிக மழை இல்லை, இந்த நேரம் தண்ணீர் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, அதிக சக்தி கொண்ட பம்புகளை பயன்படுத்த வேண்டும். இன்னும் அப்பகுதியில் ஐந்தரை அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது, என்று ஜேசுதாஸ் கூறினார்.
தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), உள்ளூர் காவல் துறையுடன் இணைந்து, மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் ஆதரவுடன், உள்ளே சிக்கியிருந்த மக்களுக்கு பிஸ்கட், ரொட்டி போன்ற அடிப்படை பொருட்கள் வழங்கப்பட்டன. பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஜெருசலேம் இன்ஜினியரிங் விடுதி மாணவர்களையும் போலீசார் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
ஏஜிஎஸ் காலனியில் வசிக்கும் ஹரிஹரன், வீட்டில் சிக்கித் தவிக்கும் 80 வயது தாயை பார்க்க முடியவில்லை. குறைந்த படகு சேவைகள் இருப்பதால், அதிகாரிகளால் தேவையான உதவிகளை வழங்க முடியவில்லை என்று கூறினார்.
‘திங்கட்கிழமை கனமழைக்கு மத்தியில் என்னால் வீட்டுக்கு செல்ல இயலவில்லை. நான் வேளச்சேரியில் உள்ள எனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்தேன்.
செவ்வாய்க் கிழமை மழை நின்றதால், ஏஜிஎஸ் காலனியில் உள்ள எனது வீட்டுக்கு செல்ல முடிவு செய்தேன், ஆனால் கழுத்து அளவு ஆழம் வரை தண்ணீர் உள்ளது. அந்த பகுதி முழுவதும் வெள்ளம்; பாம்புகள் மற்றும் பூச்சிகள் வீட்டிற்குள் நுழைந்ததால், என் அம்மாவை நினைத்து பயமாக உள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் அந்த இடத்தை அடையவில்லை. நான் பலமுறை அவர்களிடம் கூறியும் அதிகாரிகள் இதுவரை என் தாயை மீட்கவில்லை. காலை 10 மணிக்கு வேளச்சேரியில் இருந்து கிளம்பி மதியம் 1:50 மணிக்கு இங்கு வந்தேன். எனது நண்பரின் இடத்தை நான் அடைய இன்னும் மூன்று மணிநேரம் மேல் ஆகும். என் அம்மா நலமாக இருப்பார் என்று நம்புகிறேன், ’ என்று ஹரிஹரன் கூறினார்.
தரமணி, வேளச்சேரி போன்ற பகுதிகளில் போக்குவரத்து வசதி இல்லாததால் முழங்கால் அளவு தண்ணீரில் பலர் நடந்து செல்வதை காண முடிந்தது.
சென்னை காவல்துறையின் சமீபத்திய அறிக்கையின் படி, புதன் கிழமையன்று, மழையால் நகரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Read in English: No food, electricity and internet connectivity: People of Chennai battle aftereffects of Cyclone Michaung
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.