மிக்ஜாம் புயல் விலகிச் சென்றதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை அளவு குறைந்து, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
ஞாயிற்றுக் கிழமை இரவு முதல் பெய்த இடைவிடாத மழையால் சென்னை மாநகரமே நேற்று வெள்ளக்காடானது. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியதால் பல இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை, வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை, சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை, தியாகராயநகர் மேட்லி சுரங்கப்பாதை உள்ளிட்ட 17 சுரங்கப்பாதைகள் வெள்ளநீர் தேங்கியதால் மூடப்பட்டன. பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் புகுந்த வெள்ளநீரால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடிய தொடங்கியதை அடுத்து பேருந்து போக்குவரத்து சீரடைந்து வருகிறது. கோயேம்பேடு மற்றும் தாம்பரத்தில் இருந்து வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில்கள் இன்று வழக்கம் போல இயக்கப்படுகின்றன.
இருப்பினும் சில பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை- தென் சென்னையின் முக்கிய வழித்தடத்தில் உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் 3 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சுரங்கப்பாதையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு அங்கு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அந்த பகுதியில் காவல்துறையினரும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் வாகன ஓட்டிகள் மாற்று பாதையை பயன்படுத்த காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
மேலும், சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் மற்றும் பல விரைவு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“