வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. குறிப்பாக வடபழனி, வளசரவாக்கம், அம்பத்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தியாகராய நகர், அண்ணாநகர், வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புப் பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
பலத்த சூறைக்காற்றுடன் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் தற்போது சென்னையில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. நாளை புயல் மேலும் தீவிரமடைந்து தெற்கு ஆந்திராவின் நெல்லூர் - மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கிறது.
இன்று காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மழை பாதிப்பு அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகமிக அவசியமான சூழல் இன்றி வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த பெரும் சேதத்தை விளக்க வார்த்தைகள் இல்லை என்று, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது முகநூல் பதிவில், ’இந்தப் பெரும் சேதத்தை விளக்க வார்த்தைகள் இல்லை, புயலின் வெளிப்பகுதி சென்னை கடற்கரையை மேய்ந்து கொண்டிருக்கிறது. மேற்கு மேகங்கள் சென்னைக்கு மேலே தீவிரமாக நிலவுகின்றன.
இந்த மெதுவான இயக்கத்தால், இன்று மாலை அல்லது இரவு வரை சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யும்'.
/indian-express-tamil/media/media_files/CHP7xvLIiKsQhzCMeH6g.jpg)
நுங்கம்பாக்கம் மழை
03.12.2023 அன்று காலை 8.30 - 60 மி.மீ
04.12.2023 அன்று காலை 8.30 - 230 மி.மீ
காலை 8.30 முதல் 10.00 வரை 04.12.2023 - 50 மி.மீ.
இதுவரை மொத்தம் 340 மி.மீ., என்று பிரதீப் ஜான் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“