தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து இன்று (டிச.2) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் பின்னர் அது புயலாக மாறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் திங்களன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா தலைமை செயலாளர்களுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை நடத்தியது.
தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் வலுவிழந்த மரம், விளம்பர பேனர்களை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற வானிலை அதிகாரி டாக்டர் பாலசுப்ரமணியன் கூறுகையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 630கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இன்று மாலைக்குள் 400 கி.மீ தொலைவுக்கு வரும். இதனால் இன்று முதல் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
புயல் உருவாகி 3-ம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து கிழக்கு- தென்கிழக்கில் 80 கி.மீ தொலைவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4-ம் தேதி சென்னையில் இருந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும். சென்னை வழியாக சென்று ஆந்திரா கடலில் மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 5-ம் தேதி ஆந்திராவின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் சென்னைக்கு அருகில் வரும் போது 3,4-ம் தேதி அங்கு கனமழை பெய்யக் கூடும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“