வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
தற்போது புயல் ஆந்திரா மாநிலம் அருகே நிலைகொண்டுள்ளது. வரும் 5ம் தேதி முற்பகலில் நெல்லூர்- மசுலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும். புயல் காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், நாகை, காரைக்கால், பாம்பன்,தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் பேஸ்புக் சமூக வலைதளத்தில், “பொன்னேரி-ஸ்ரீஹரிகோட்டா பெல்ட் கடல் பகுதியில் தெற்கிலும் மேற்கிலும் பெரிய மேகங்கள் பூத்துள்ளன. சென்னை மற்றும் கேடிசிசியில் நள்ளிரவு வரை மழை நீடிக்கும். இந்த புயல் நாளை நெல்லூர்-காவாலி பகுதிக்கு அருகில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, ரெட்ஹில்ஸ் உபரி நீர் 11.30 மணியளவில் 4000 கனஅடியாக உள்ளது. தற்போது 21.20 அடிக்கு எதிராக 20.20 அடியாக உள்ளது.
பூண்டி அணைக்கு உபரி நீர் தற்போது 6000 கன அடியாகவும், நீர்வரத்து 17000 கன அடியாகவும் உள்ளது.
செம்பரம்பாக்கம் உபரி நீர் மதியம் 12.30 மணியளவில் 6000 கனஅடியாகவும், நீர்வரத்து 10000 கன அடியாகவும் உள்ளது. தற்போது 24 அடியில் இருந்து 21.77 அடியாக உள்ளது.
காலை 10.30 மணியளவில் சோழவரம் உபரி நீர் 3000 கனஅடியாகவும், நீர்வரத்து 4000 கனஅடியாகவும் உள்ளது. 18.86 அடியில் இருந்து தற்போது 18.01 அடியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“