தமிழகத்தில் இந்தாண்டு கோடை வெயில், கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தொடங்கியது. இதை முன்னிட்டு, கோடை வெயில் பல மாவட்டங்களில் 100 டிகிரி வெப்பத்தை தாண்டி பதிவாகியுள்ளது.
சென்னையில் கோடை வெயில் 100 டிகிரியை தாண்டியதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் சமீபத்தில் தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களுக்கு மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து காணப்படுகிறது.
வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் மே 7ஆம் தேதியன்று, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.
மோக்கா என்ற அரபிமொழி வார்த்தையானது பருவகாலம், நிகழ்வு மற்றும் வாய்ப்பு ஆகிய அர்த்தங்களை கொண்டுள்ளது. இந்த பெயரை ஏமன் நாடு வழங்கியுள்ளது.
இந்தாண்டு இந்திய பெருங்கடலில் உருவாகும் முதல் புயலாக மோக்கா விளங்குவது குறிப்பிடத்தக்கது.
கோடை காலத்தில் எப்போதாவது உருவாகும் அரிய புயல் வகையை சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.
இந்த புயல் மத்திய வங்கக்கடல் அருகே நகர்ந்து மியான்மரை நோக்கி செல்லும் என்பதால், இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
“தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நாளை (மே 6ஆம் தேதி) உருவாகிறது. இது வலுப்பெற்று 7-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று வடக்கு திசை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெறும். இதன் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 7-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 7, 8-ந்தேதிகளில் 60 கி.மீ. முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 10-ந்தேதி 80 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இந்த தேதிகளில் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்”, என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil