வங்கக் கடலில் வரும் 7-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 9-ம்தேதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 6-ம் தேதி வளிமண்டலத்தில் காற்றுசுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால் 7-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, 8-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன் பிறகு 9-ம் தேதி புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என பாலச்சந்திரன் கூறினார்.
தொடர்ந்து மத்திய வங்கக்கடல் நோக்கி வடக்கு திசையில் நகரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக உருவாகும் புயலுக்கு ‘மோச்சா’ எனப் பெயரிடப்பட இருக்கிறது. இதையடுத்து புயல் எங்கு கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெதர்மேன் முத்துச்செல்வம் என்பவர் வெளியிட்ட பதிவில், புதிதாக உருவாகும் புயல் சென்னை- செங்கல்பட்டு அல்லது மேற்கு வங்கம்- கொல்கத்தா இடையே கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த பதிவில், அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் அதை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவாக கூடும். அதன் பின் 7,8-ம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை- செங்கல்பட்டு இடையே கரையைக் கடக்கலாம் என ஆஸ்திரேலிய வானிலை மையம் கணித்துள்ளது.
அதேபோல், அமெரிக்காவைச் சேர்ந்த ஜி.எஃப்.எஸ் அறிக்கை படி மேற்கு வங்கம்- கொல்கத்தா இடையே கரையைக் கடக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஜி.எஃப்.எஸ் அறிக்கை 65-70% வரை சரியாக இருக்கும். இ.சி.எம் எனப்படும் ஈரோப்பியன் நாடுகளைச் சேர்ந்த வானிலை மைய கூற்றுப்படி வங்கக் கடலில் உருவாகும் புயல் இந்தியாவின் மேற்கு வங்கம்-கொல்கத்தா, வங்கதேசம் இடையே கரையை கடக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் கடந்த 3 நாட்களாக இதே நிலைதான் கூறிவருகிறது.
இருப்பினும் புயல் உருவான பின்பு தான் புயல் எங்கு கரையைக் கடக்கும் என்று கணிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“