வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் இன்று(மே 10) மாலை புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் உருவானால் அதற்கு மோக்கா எனப் பெயரிடப்படும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் கடந்த இரு தினங்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது படிப்டியாக வலுப்பெற்று புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி இன்று புயல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் போர்ட் பிளேயருக்கு தென்மேற்கே சுமார் 510 கிமீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகவும் நாளை தீவிர புயலாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அதிதீவிர புயலாக வலுப்பெற்று 14-ம் தேதி காலை வங்காள தேசம்- மியான்மர் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் மே 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. 11-ம் தேதி வரையில் காற்றின் வேகம் 50 கி.மீ. முதல் 70 கி.மீ. வரை இருக்கும். பின்னர் புயல் உருவாகும் பட்சத்தில் இது அதிகரிக்க கூடும். அதனால் 13-ம் தேதி வரை மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“