ஓகி பாதிப்பை ஆய்வு செய்ய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மத்திய குழு நாளை வருகிறது. அந்தக் குழு கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் மத்திய அரசு நிவாரணம் வழங்கும்.
ஓகி புயல், கடந்த நவம்பர் 30-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கியது. இதில் மாவட்டம் முழுவதும் மக்களின் வாழ்வாதாரமாக ரப்பர் மரங்கள், வாழைகள், தென்னைகள் ஆகியன சேதமாகின. புயல் அறிவிப்புக்கு முன்பே கடலுக்கு சென்ற மீனவர்கள் ஆயிரக்கணக்கில் ஓகி புயலில் சிக்கி மாயமானார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்றுவரை கரை திரும்பவில்லை. அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கெடுத்து நிவாரண பணிகளை முடுக்கிவிட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முகாமிட்டனர். அவர்கள் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதல் கட்ட ஆய்வில் குமரி மாவட்டத்தில் மட்டும் ரூ.170 கோடிக்கு சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று கணக்கிடப்பட்டது.
ஓகி புயல் சேதங்களை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். இதுபோல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோகித், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய மந்திரிகள் நிர்மலா சீத்தாராமன் உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து பார்வையிட்டு சென்றனர்.
பிரதமர் மோடி வந்த போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓகி புயல் நிவாரண பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தார். இது தொடர்பாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதன்பேரில் சேத மதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் ஆய்வுக்கு வருகிறார்கள். இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் கூறியதாவது: ஓகி புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு வருகிற 28-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார்கள். இக்குழுவில் 4 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் அதிக சேதம் அடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். இது தவிர கடற்கரை பகுதிகள் மற்றும் மழையால் சேதம் அடைந்த பயிர் நிலங்களையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள். இங்கு எடுக்கப்பட்ட ஆய்வுகள், பாதிப்புகள் குறித்த அறிக்கைகள் மத்திய குழுவிடம் அளிக்கப்படும். தொடர்ந்து ஆலோசனை கூட்டமும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.