ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவித்தால்தான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மக்களை நேரில் சந்தித்து, திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஓகி புயல் காரணமாக மீனவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள். தமிழக அரசின் சார்பில் கடந்த 29ம் தேதியே முன்னெச்சரிக்கை விடுத்தோம் என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருந்தார். அப்படி எந்த ஒரு எச்சரிக்கையும் வரவில்லை என்று எங்களிடம் மட்டுமல்லாமல் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள், மீனவர்கள். இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் இதை வாக்குறுதியாக தந்திருந்தார்கள். அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
கடலின் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 500, 1000 பேர் காணாமல் போனதாக அச்சுறுத்தும் வகையிலே தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. அரசு தரப்பிலோ முறையான கணக்கெடுக்கப்பட்டுள்ளதா என்றால் இல்லை. மீட்பு பணியும் ஏமாற்றத்தை தருகிறது. புயல் மழையால் உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் தவிர எந்த நிவாரண தொகையும் வழங்கப்படவில்லை. பக்கத்து மாநிலமான கேரளாவில் புயல் மழையால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் மாநில அரசு வழங்கியுள்ளது.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மீனவர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசுகிறார்.
புயல் மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என நெல் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ரப்பர் மரத்திற்கான உற்பத்தி செலவை அரசே ஏற்க வேண்டும் என்று ரப்பர் மரம் வளர்ப்போர் வலியுறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். வாழை மர உற்பத்தி செலவையும் அரசு ஏற்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பொது மக்களை பொறுத்தவரையில் வீடுகளை இழந்தவர்கள் அதிகம் உள்ளனர். வீடுகளை இழந்தவர்களுக்கு, வீட்டு கூறையை இழந்தவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மின் தடை இன்னமும் முழுமையாக சரி செய்யப்படவில்லை. 40 சதவிகிதம் மட்டுமே மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆறு தொகுதி ஆய்வு பணி மூலமாக அரசை கேட்டுக் கொள்வது, ஆடம்பர விழாக்களை தவிர்த்துவிட்டு, நிவாரண பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும்.
முகாம்களில் தங்கியிருந்த மக்களை நான் சந்திக்கக் கூடாது என்பதற்காக அவசர அவசரமாக முகாம்களில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 6 தொகுதியிலும் திமுக, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் என்பதால், காழ்புணர்ச்சியோடு செயல்படுகிறார்கள். மாவட்டத்தை சுத்தமாக புறக்கணிக்கிறார்கள். மூன்று அமைச்சர்கள் நான்கைந்து நாட்களாக இங்கு முகாமிட்டிருப்பதாக சொல்கிறார்கள். துணை முதல்வரும் 2 நாட்களாக முகாமிட்டுள்ளார். ஆனால் இருந்து இதுவரையில் முறையாக கணக்கெடுக்கப்பட்டுள்ளதா? அதற்கான முயற்சியிலாவது ஈடுபட்டிருக்கிறார்களா?
ஆறு நாட்களாகியும் முதல்வர் இங்கு வரவில்லை. அவர் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கட் அவுட் வைக்கவும் விழா நடத்தும் முயற்சியில்தான் இருக்கிறார். கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கூட திமுக ஆட்சியில் கூட கட்-அவுட் வைத்தார்கள் என்று சில படங்களை காட்டினார். செம்மொழி மாநாடு போட்டோ வீடியோ காட்டினார். ஒரு இடத்தில் கூட கலைஞர் படம் கிடையாது. திமுக கொடி கிடையாது. எல்லாமே தமிழுக்கு தொண்டு செய்தவர்கள் படங்கள்தான் இடம் பெற்று இருந்தது. இந்த சராசரி அறிவு கூட முதல் அமைச்சருக்கு இல்லையே என்பதுதான் வேதனையாக இருக்கிறது. மக்களை நேரில் சந்தித்தால், அவர்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் முதல்வரும், அமைச்சர்களும் மக்களை சந்திக்க அச்சப்படுகின்றனர்.
கேரள முதல்வர் மாநிலத்தை பேரிடர் மாநிலமாக அறிவிக்க கோரிக்கை வைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
அதன் பின்னர் அவர் ஆட்சியர் அலுவலகம் சென்று, மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்குமாறு வலியுறுத்தினார்.