ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. முறைகேடுகளில் ஈடுபட்டுவருகிறது என மாநில தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்காளர்களை சாமியானா போட்டு அடைத்து வைத்து பணத்தை காட்டி ஏமாற்றுகின்றனர்.
திமுக ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயலை செய்கிறது. முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலத்தில் உட்கார்ந்துக் கொண்டு ஆய்வு என்ற பெயரில் மாவட்ட ஆட்சியர்களை கூப்பிட்டு, திமுக ஆள்கள் பணம் கொண்டு செல்வார்கள் நீங்கள் தடுக்கக் கூடாது எனக் கூறுகிறார்.
மேலும் தொகுதியில் திமுகவினர் கோமாளித் தனத்தின் உச்சக்கட்டத்தை காட்டுகின்றனர். ஒட்டகத்தில் சென்று ஒட்டுக் கேட்கின்றனர்.
மறுபுறம் போலி வாக்காளர்கள் தயாரிக்கப்பட்டு உள்ளனர். இதெல்லாம் ஜனநாயகத்தை சிதைக்கும் கேலிக் கூத்தாகும் விஷயங்கள்.
இதையெல்லாம் தாண்டி ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றி பெறும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சரிக்கிறது. ஆதி திராவிடர் மக்கள் வசிக்கும் இடங்களில் கழிவுகள் போடப்பட்டுள்ளன.
இந்த இடத்திற்கு சென்று மு.க. ஸ்டாலின் சென்றாரா? வேங்கைவயல் கிராமத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்லாதது ஏன்?
தொடர்ந்து ஏ.டி.எம், கொள்ளை, ஒரே நாளில் 9 கொலை என தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தொகுதியை கைப்பற்ற லட்சக்கணக்கான பணத்தை கொட்டியுள்ளனர்.
இதையெல்லாம் தாண்டி அ.தி.மு.க. வெற்றி பெறும். அது இந்த விடியா அரசுக்கு பாடமாக அமையும்” என்றார்.
மேலும், திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். மிகப்பெரிய வெற்றியை பெற்றது போல், ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றிப் பெறும்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/