முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தி.மு.க.வின் ஊழல் தொடர்பாக உள்துறை அமைச்சரை சந்தித்து பட்டியல் வழங்கியுள்ளோம். தி.மு.க.வின் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நேரடி ஊழலில் ஈடுபடுகின்றனர். முதல்வர், முதல்வர் மருமகன், மகன் உள்ளிட்டோர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்த வேண்டும். மேலும் கட்சியும், ஆட்சியும் மு.க. ஸ்டாலின் கையில் இல்லை. திருநெல்வேலியில் மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களே அமளியில் ஈடுபட்டு மன்றத்தை முடக்கியுள்ளனர்.
இது அம்மா ஆட்சிக் காலத்திலோ, புரட்சித் தலைவர் ஆட்சிக் காலத்திலோ ஏன் எடப்பாடி ஆட்சிக் காலத்திலோ நடந்ததா?
மேலும், ஒரு சட்டத்தை கொண்டுவந்து உடனடியாக வாபஸ் பெறுகின்றனர். திருமண மண்டபங்களில் மது விற்பனை என்பது அபத்தமானது.
ஒரு குடும்பத்துக்கு வருமானம் போதவில்லை என்பதால் இது நடக்கிறது” என்றார். தொடர்ந்து, மொபைலில் சரக்கு அனுப்ப ஏற்பாடு செய்து விடுவார்கள் என்று குற்றஞ்சாட்டினார்.
கர்நாடகாவில் தமிழ் தாய் வாழ்த்து நிறுத்தப்பட்ட தவறு எனக் கூறிய டி. ஜெயக்குமார், தன் கட்சியினரின் பேச்சுக்களை அண்ணாமலை கண்டிக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக ஓ. பன்னீர் செல்வம் குறித்து ஒருமையில் பேசிய டி. ஜெயக்குமார், “நாடாளுமன்ற தேர்தலில் 40-40ல் வெல்வோம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“