திருபத்தூர் அருகே நாயக்கனேரி மலைக்கிராமத்தின் பெண் ஊராட்சி மன்ற தலைவர் காணாமல்போன விவகாரத்தில் அவரது கணவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் அளித்துள்ளார்.
ஆம்பூர் அடுத்த ஜவ்வாது மலைத் தொடரில் அமைந்துள்ளது நாயக்கனேரி மலைக்கிராமம். இந்த கிராம ஊராட்சியில் பனங்காட்டேரி மற்றும் காமனூர் தட்டு என்ற மேலும் 2 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த நாயக்கனேரி மலைக்கிராம ஊராட்சியில் மொத்தம் 9 வார்டு உள்ளன.
இந்த நிலையில் கடந்த உள்ளாட்சித் தேர்தல் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி காமனூர் தட்டு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் இவரது மனைவி இந்துமதி என்பவரைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய முற்படும் போது நாயக்கனேரி மலைவாழ் மக்கள் இந்துமதியைத் தடுத்து நிறுத்தி அவருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்துமதி கடைசி நேரத்தில் ஊர் மக்களின் எதிர்ப்பை மீறி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து பட்டியலின பெண் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ததால் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மலைக்கிராம மக்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாமலும் மற்றும் ஊராட்சியில் உள்ள 9 வார்டு உறுப்பினர் பதவிக்கும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்தனர்.
இதனால் இந்துமதி போட்டியின்றி நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மலைக்கிராம மக்கள் இந்துமதி மற்றும் அவரது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்தனர்.
இதனால் இந்துமதி மற்றும் அவரது கணவர் பாண்டியன் மலைக்கிராமத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வாடகை வீட்டில் தங்கி வருகின்றனர். மேலும் இந்துமதி பாண்டியனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட காமனூர்தட்டு பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை ஊரை விட்டுத் தள்ளி வைத்து ஊர் பஞ்சாயத்து முடிவெடுத்துள்ளனர்.
இதனால் இந்துமதி- பாண்டியனின் உறவினர்கள் மலைக்கிராமத்தில் இருந்து வெளியேறி வெளியூர்களுக்கு வேலை தேடிச் சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து இந்துமதி ஊராட்சி மன்ற தலைவராகப் பதவியேற்கக் கூடாது என நாயக்கனேரி ஊராட்சி மக்கள் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அந்த வழக்கின் விசாரணையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் பாண்டியன் மற்றும் இந்துமதி இவர்களது இரு மகன்களுடன் தற்போது ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வந்த நிலையில் கடந்த 9ம் தேதி மாலை இந்துமதி வீட்டிலிருந்து பால் வாங்கி வருவதாகக் தனது கணவர் பாண்டியனிடம் தெரிவித்து வெளியே சென்றுள்ளார்.
பின்னர் வெகுநேரம் ஆகியும் இந்துமதி வீடு திரும்புதலால் பாண்டியன் அவரை பல இடங்களில் தேடியுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது வரை இந்துமதி வீடு திரும்பாததால் இது குறித்து பாண்டியன் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் தங்களுக்கு தொடர்ந்து தொந்தரவு அளித்து வரும் நாயக்கனேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் அவரது ஆதரவாளர்கள் மீதும் சந்தேகத்தின் பெயரில் புகார் அளித்துள்ளதாக இந்துமதியின் கணவர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.