தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் புதிதாக 5,528 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் 8ம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஷாப்பிங் மால்கள் திறப்பது, பேருந்துகள் இயக்கம், ரயில் சேவைகள் தொடங்குவது போன்ற புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
பரிசோதனை விவரம்:
தமிழகத்தில் மொத்தம் உள்ள 163 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் (அரசு பரிசோதனை மையங்கள் 64, தனியார் பரிசோதனை மையங்கள் 99) இன்று 85,473 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 56 லட்சத்து 30 ஆயிரத்து 323 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் இன்று 83,411 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 54 லட்சத்து 49 ஆயிரத்து 635 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் புதிய பாதிப்புகள்:
தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 10) ஒரே நாளில் புதிதாக 5,528 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 52ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் இதுவரை மொத்தம் ஆண்கள் - 2,93,154 பேர்களும் பெண்கள் - 1,92,869 பேர்களும் திருநங்கைகள் 29 பேர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் விவரம்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 22 பேர்களும் அரசு மருத்துவமனைகலில் 42 பேர்கள் என 64 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,154 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம்:
அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 6,185 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 29 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 48,482 பேர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 991 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் - 440, சேலம் - 300, திருவள்ளூர் - 296, செங்கல்பட்டு - 279, கடலூர் - 263, விழுப்புரம் - 189, காஞ்சிபுரம் - 173, திருநெல்வேலி - 155, வேலூர் - 152, திருச்சி - 130, என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 991 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் 4,537 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா தொற்று பல வாரங்களாக மேலாக தினசரி தொற்று 1,100 - 1,300க்குள் பதிவாகி வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாஅ 1000க்குள் பதிவாகி வருகிறது. சென்னைக்கு வெளியே கோவை, சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் தொற்று பதிவாகி உள்ளது.
அதே நேரத்தில் இன்று தமிழகத்தில் புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 5,528 என்ற எண்ணிக்கையைவிட, இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 6,185 ஆக அதிகமாக பதிவாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.