தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,684 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில், கொரோனா பாதிப்பால் 87 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 8,000ஐ தாண்டியது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் 8ம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஷாப்பிங் மால்கள் திறப்பது, பேருந்துகள் இயக்கம், ரயில் சேவைகள் தொடங்குவது போன்ற புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
பரிசோதனை விவரம்:
தமிழகத்தில் மொத்தம் உள்ள 163 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் (அரசு பரிசோதனை மையங்கள் 64, தனியார் பரிசோதனை மையங்கள் 99) இன்று 83,266 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 54 லட்சத்து 62 ஆயிரத்து 277 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் இன்று 81,066 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 52 லட்சத்து 85 ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் புதிய பாதிப்புகள்:
தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 8) ஒரே நாளில் புதிதாக 5,684 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 74 ஆயிரத்து 940 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் விவரம்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 43, அரசு மருத்துவமனைகளில் 44 பேர் என மொத்தம் 87 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,012 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம்:
அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 6,599 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 16 ஆயிரத்து 715 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 50,213 பேர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 988 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 446, கடலூர் – 407, செங்கல்பட்டு – 364, திருவள்ளூர் – 277, திருவண்ணாமலை – 242, ராணிப்பேட்டை – 164 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 988 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் 4,696 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா தொற்று பல வாரங்களாக மேலாக தினசரி தொற்று 1,100 – 1,300க்குள் பதிவாகி வந்த நிலையில், கடந்த ஒருவாரமாக 1000க்குள் பதிவாகி உள்ளது. சென்னைக்கு வெளியே கோவை, கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் பதிவாகி உள்ளது.
அதே நேரத்தில் இன்று தமிழகத்தில் புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 5,684 என்ற எண்ணிக்கையைவிட, இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 6,599 ஆக அதிகமாக பதிவாகியுள்ளது.