ரசாயனம் கலக்கப்படுவதாக தனியார் பால் நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட்டு தான் பேட்டி அளிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
தனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் கூறியிருந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக ஹட்சன், டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் சார்பில் தலா ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க அமைச்சருக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் மூன்று தனியார் பால் நிறுவனங்களின் பால் மாதிரிகளை உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத் ஆய்வகத்தில் ஆய்வு செய்த அறிக்கை, அமைச்சர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த பால் நிறுவனங்களின் பொருட்கள் தரம் குறைந்தவை என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தங்கள் பால் நிறுவனங்கள் மீது அமைச்சர் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகள் தெரிவித்து வந்தபோதும், பாலில் ரசாயனம் கலந்ததாக தங்கள் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என பால் நிறுவனங்கள் சார்பில் வாதிடப்பட்டது.
இதுவரை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்புகளில் குறிப்பிட்ட பால் நிறுவனங்களின் பெயரை குறிப்பிடாமல் தான் குற்றச்சாட்டுகள் தெரிவித்தபோதும், அவசியம் இல்லாமல் இந்த நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகி உள்ளதாக அமைச்சர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை மீண்டும் திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.