நீதிமன்ற உத்தரவை மீறி, பால் நிறுவனங்கள் தொடர்பாக வழக்கறிஞர் மூலம் அமைச்சர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்ததாக பால் நிறுவனங்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் கூறியிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக ஹட்சன், டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் சார்பில் தலா ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க அமைச்சருக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
இதனிடையே, மூன்று தனியார் பால் நிறுவனங்களின் பால் மாதிரிகளை உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத் ஆய்வகத்தில் ஆய்வு செய்து, பால் மாதிரிகளின் முடிவுகள், அமைச்சர் தரப்பில் நீதிமன்றத்தில் அளிக்கபட்டது. அதில் இந்த பால்கள் தரம் குறைந்தவை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை மறுத்து பால் நிறுவனங்கள் விளம்பரங்கள் வெளியிட்டன. அதற்கு அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் ஊடகங்களில் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பால் நிறுவனங்கள் பற்றி அமைச்சர் ஆதாரமில்லாமல் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரின் வழக்கறிஞர் மூலமாக பேட்டி அளிக்கப்பட்டுள்ளது என பால் நிறுவனங்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரின் பேட்டி வெளியான டி.வி, வீடியோ மற்றும் செய்தித்தாள் ஆதாரங்களை தாக்கல் செய்யவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமைச்சர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்டது.
இதனைத்தொடர்ந்து, ஆதாரங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி முடிவில் யார் மீது குற்றச்சாட்டு நிரூபணமானாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். அத்துடன், வழக்கின் விசாரணையை நாளை பிற்பகலுக்கு தள்ளி வைத்தும் அவர் உத்தரவிட்டார்.