தலித் முதியவர் தனது ஆட்டை ஆதிக்க சாதியினரின் ஆட்டு மந்தையில் சேர விட்டதற்காக அவரை காலில் விழுந்து கும்பிட கட்டாயப்படுத்திய ஆதிக்க சாதியைச் சேர்ந்த 7 பேரை கயத்தாறு போலீசார் கைது செய்துள்ளனர்.
கயத்தாறு அருகே தலித் முதியவரை தங்கள் காலில் விழுந்து கும்பிடக் கட்டாயப்படுத்திய ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 8 பேர் மீது கயத்தாறு போலீஸார் திங்கள் கிழமை எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே ஓலைகுலம் கிராமத்தைச் சேர்ந்த தலித் முதியவர் பால்ராஜ் என்பவரை ஆதிக்க சாதியினர் கட்டாயப்படுத்தி தங்கள் காலில் விழுந்து வணங்கச் செய்ததை வீடியோ பதிவு செய்து அவரை இழிவுபடுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் பரப்பினர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ காவல்துறையின் கவனத்துக்கு சென்றதையடுத்து, இது குறித்து தலித் முதியவர் பால்ராஜ் அளித்த புகாரின் பேரில், அவரை காலில் விழுந்து கும்பிட கட்டாயப்படுத்திய ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிவசங்கு தேவர், சங்கிலிபாண்டி, உடையம்மாள், மாரிகாளை, வீரையா, மகேந்திரன், மகாராஜன், அருண் கார்த்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம், ஓலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தலித் முதியவர் பால்ராஜ் (60), அக்டோபர் 8ம் தேதி திருமங்கலக்குறிச்சி கிராமம் நடுகண்மாயில் தனது 90 செம்மறி ஆடுகளையும் 10 வெள்ளாடுகளையும் மேய்த்து வந்தார். அவருடைய மந்தையில் இருந்த ஒரு வெள்ளாட்டுக் குட்டி, சிவசங்கு தேவருக்கு சொந்தமான மந்தைக்குள் தவறி சென்று கலந்திருக்கிறது.
இதனால், பட்டியல் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜின் ஆடு தனது ஆடுகளுடன் கலந்ததால் ஆத்திரம் அடைந்த சிவசங்கு தேவர், பால்ராஜை சாதி பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது, அங்கே வந்த தனது உறவினர்கள் 2 பேருடன் சேர்ந்துகொண்டு சிவசங்கு தேவர், பால்ராஜை தாகியதாக கூறப்படுகிறது.
பால்ராஜ் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தாக்குதல் நடத்திய 7 பேர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் சிவசங்கு தேவர் முன்பு காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்குமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறினார்.
தலித் முதியவரை காலில் விழுந்து வணங்க கட்டாயப்படுத்தியது தொடர்பாக, கயத்தாறு போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் ஆனால், அவர்கள் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் விசாரணை நடந்து வருவதாகவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். மேலும், விசாரணையின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று ஊடகங்களிடம் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சிவசங்கு தேவர், சங்கிலிபாண்டி, மாரிகாளை, வீரையா, மகேந்திரன், மகாராஜன், அருண் கார்த்தி ஆகிய 7 பேர் கயத்தாறு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் உடையம்மாள் என்ற பெண் தலைமறைவாக உள்ளார். கைது செய்யப்பட்டவர்கள், கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"