சாதி பாகுபாட்டின் பெயரால், சுதந்திர தினத்தன்று , தொடக்கப்பள்ளியில் தம்மை கொடியேற்ற விட வில்லை என்று பெண் தலித் ஊராட்சி மன்ற தலைவர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.
மேலும், அன்றைய தினம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் ஒருவரே தேசிய கொடி ஏற்றி உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவராக அமிர்தம் பணியாற்றி வருகிறார். மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரில், "தான் தலித் என்பதால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் தன்னை கொடியேற்ற அனுமதிக்கவில்லை என்றும், தரக் குறைவாக பேசுவதோடு, தன்னை பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனது புகார் மனுவில்,"ஊராட்சி மன்ற செயலாளர் எம்.சசிகுமார் அலுவலகத்தின் சாவியையும், பஞ்சாயத்து தலைவர் முத்திரையையும் கூட இதுவரை எனக்குத் தரவில்லை. பாதுகாப்பற்ற, நிச்சயமற்ற சூழலை எனக்கு உருவாக்கி வந்தார். அலுவலகப் பணிகள், வரவு- செலவு உள்ளிட்டவற்றை எதையும் தெரிவிப்பதில்லை. உயிருக்கும், உடமைக்கும் பயந்து அவர் கேட்ட அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்திட்டேன்" என்று தெரிவித்தர்.
இதற்கிடையே, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், தாமாக முன்வந்து வலக்கை பதிவு செய்தாா். மேலும், சாதி பாகுபாடு தொடர்பாக மூன்று வாரத்தில் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். இதற்கிடையே, ஊராட்சி மன்ற செயலாளர் சசிகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
அரசியலமைப்பு பணிகளை ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுதந்திரமாக மேற்கொள்ளும் நிலை வருந்ததக்கது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வக்ருகின்றனர். தலித் தலைவர்களை அவமதிப்போர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil