திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் ஒரு தலித் மாணவன் தனக்கு சக மாணவர்களால் சாதி ரீதியாக இழைக்கப்பட்ட வன்கொடுமை குறித்து ஆசிரியர்களிடம் புகார் அளித்ததால், அந்த தலித் மாணவனையும் அவன் தங்கையையும் அந்த மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், அரிவாளால் வெட்டுபட்டு படுகாயம் அடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலித் மாணவன் மற்றும் அவனது தங்கையை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டு இந்த நிகழ்வை பொதுமக்கள் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
இந்த கொடூர சம்பவம் குறித்து, பள்ளிகளில் “கயிற்றில் இருந்த சாதி வன்மம் அரிவாளுக்கு மாறியிருக்கிறது” என்று எவிடென்ஸ் கதிர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
எவிடென்ஸ் கதிர் தனது முகநூல் பக்கத்தில் நாங்குநேரியில் தலித் மாணவனை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதோடு, அதை ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்தற்காக ஆதிக்க சாதியைச் சேர்ந்த அந்த மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து விரிவாக பதிவிட்டுள்ளார். அதில் எவிடென்ஸ் கதிர் பதிவிட்டிருப்பதாவது:
பள்ளிக்கூடங்கள் சாதி வன்ம கூடங்களாக மாறி வருகிற துயரம்
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஐசியூ வார்டில் உள்ள சின்னத்துரையை பார்த்தேன். பதினேழு வயது தலித் சிறுவன். இரண்டு கைகளும் அரிவாளால் வெட்டப்பட்டு எலும்புகள் நொறுக்கப்பட்டு பெரிய கட்டுடன் படுத்திருந்தான். அவனது கண்களில் அச்சத்தின் ஆழம் தென்பட்டது. மரணத்தின் விளிம்பில் இருந்து பிழைத்து வந்த அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது?
அவனது ரத்தம் அவனது வீட்டிலும் தெருவிலும் கதவிலும் பாத்திரங்களிலும் சகதியாய் படிந்து கிடக்கிறது. அவனை வெட்டியவர்களின் நடவடிக்கை கூலிப்படை ஆட்கள் போன்றே இருந்தது. ஆனால் வெட்டியவர்கள் அனைவரும் மாணவர்கள். பதினேழு வயது, பதினாரு வயது உள்ளவர்கள்.
சாதி ஒருவனை மரணத்தின் விளிம்பில் தள்ளியிருக்கிறது. சிலரை அரிவாள் எடுக்க வைத்து கொலை பசியை ஏற்படுத்தியிருக்கிறது.
களத்தில் முழுமையான விசாரணை மேற்கொண்டோம். நாங்குநேரியில் வசித்து வருபவர் அம்பிகாபதி (54). தலித் சமூகத்தைச் சேர்ந்த அம்பிகாபதிக்கு இரண்டு குழந்தைகள். பதினேழு வயது சின்னத்துரை, பதிமூன்று வயது சந்திராசெல்வி. வீட்டு வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். கடுமையான ஏழ்மை. ஆயினும் குழந்தைகள் இருவரும் நன்கு படிக்கக்கூடியவர்கள். அவரது நம்பிக்கையே குழந்தைகளும் அவர்கள் கற்கக்கூடிய கல்வியும் தான்.
மகன் சின்னத்துரை வள்ளியூரில் உள்ள கண்கார்டியா மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 12ம் வகுப்பு படித்து வருகிறான். நன்கு படிக்கக்கூடிய மாணவன். அனைத்து ஆசிரியர்களும் அவன் மீது அபரிமிதமான நம்பிக்கையும் கரிசனையும் கொண்டுள்ளனர். படிப்பை தாண்டி அவனது நடவடிக்கை அத்தனை வாஞ்சையாக இருந்துள்ளது.
திடீரென்று 10 நாட்களாக சின்னத்துரை பள்ளிக்கூடம் செல்லவில்லை. அவனது தாயார், ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்று கேட்டதற்கு, என்னை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடு, இல்லையென்றால் சென்னைக்கு அனுப்பி வை, நான் அங்கு ஏதாவது வேலை செய்கிறேன் என்று கூறியிருக்கிறான்.
அதற்கு அவனது அம்மா அம்பிகாபதி ஒப்புக் கொள்ளவில்லை. கடந்த 09.08.2023 அன்று அவனது பள்ளிக்கூட ஆசிரியை, அம்பிகாபதிக்கு அலைபேசி மூலமாக அழைத்திருக்கிறார். ஏன் உங்கள் மகன் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை, அவனுக்கு என்ன பிரச்சனை. எதுவாயினும் சரிசெய்யலாம் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் 09.08.2023 அன்று காலை 10.30 மணியளவில் சின்னத்துரையும் அவனது அம்மா அம்பிகாபதியும் பள்ளிக்கூடம் சென்றுள்ளனர். அங்கு வகுப்பு ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியை ஆகிய இருவரும் சின்னத்துரையிடம் விசாரிக்கையில், தன்னுடன் படிக்கக்கூடிய செல்வரமேஷ், சுப்பையா ஆகிய இருவரும் தன்னை சாதி ரீதியாகயும் ஆபாசமாகவும் இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். எனது பணத்தையும் பிடுங்கிக் கொள்கின்றனர். சிகரெட் வாங்கி வரச்செல்லி அடிக்கின்றனர். பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்துகின்றனர். பரிட்சையில் நான் எழுதுகிற விடைத்தாள்களை வாங்கி காப்பி அடிக்கின்றனர் என்று கூறியிருக்கிறான். அதனைக் கேட்ட இரண்டு ஆசிரியைகளும் என்ன நடந்தது என்பதை எழுதி கொடு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூற சின்னத்துரையும் எழுதி கொடுத்திருக்கிறான்.
தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்பதை முன்னரே அறிந்த சுப்பையாவும் செல்வரமேசும் அன்று பள்ளிக்கூடம் வரவில்லை.
மாலை 6.00 மணியளவில் வன்கொடுமையில் ஈடுபடுகிற செல்வரமேஷின் பாட்டியும் சித்தப்பாவும் சின்னத்துரையின் வீட்டிற்கு வந்துள்ளனர். அவனது அம்மாவிடம் இருவரும் என்ன நடந்தது என்று கேட்க, உங்க பேரனும் சுப்பையாவும் என் மகனை சாதி ரீதியாக இழிவுபடுத்தி சித்திரவதை செய்கின்றனர் என்று கூறியிருக்கிறார். அதனை கேட்டுவிட்டு இருவரும் அமைதியாக அங்கிருந்து வெளியேறி இருக்கின்றனர்.
இரவு 10.00 மணியிருக்கும். அம்பிகாபதிவும் சின்னத்துரையும் சந்திராசெல்வியும் சாப்பிடுவதற்காக உணவினை எடுத்து வைத்துக் கொண்டிருந்த நிலையில் வீட்டிற்குள் சுப்பையாவும் செல்வரமேசும் 11ம் வகுப்பு படிக்கக்கூடிய சுரேஷ்வானு என்கிற சிறுவனும் வந்துள்ளனர். அவர்களிடத்தில் சுமார் இரண்டு அடி நீளம் உள்ள அரிவாள் இருந்துள்ளது. பறத் தேவிடியா பயலே எங்களுக்கு எதிராக புகார் கொடுப்பியா என்று கூறி அரிவாளால் சின்னத்துரையின் கழுத்திலும் தலையிலும் வெட்ட முயற்சி செய்ய தனது கைகளை கொண்டு சின்னத்துரை தடுத்திருக்கிறான். இதனால் இரண்டு கைகளின் எலும்புகளும் அரிவாளால் வெட்டப்பட்டு நொறுக்கப்பட்டுள்ளது. தோள்பட்டையிலும் கால் தொடையிலும் அரிவாள் வெட்டு. அண்ணன் வெட்டப்படுவதை அறிந்த சந்திராசெல்வி தடுக்க முயற்சி செய்ய அந்த 13 வயது குழந்தையையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். அந்த ஒரு அரிவாளை எடுத்துக் கொண்டு தான் இந்த மூவரும் வெட்டியிருக்கின்றனர்.
அதனைப் பார்த்த பாத்திமா என்கிற பெண்ணும் அம்பிகாபதியும் வெட்டுப்பட்ட சின்னத்துரையும் சந்திராசெல்வியும் பலமாக கதற அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓடிவர அந்த 3 பேர் கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியிருக்கிறது.
வீடு முழுவதும் இரத்த குவியலாகவும் சகதியாகவும் கிடக்கிறது. வெட்டப்பட்ட இரண்டு பேரும் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு ஆரம்ப கட்ட சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேரை கடந்து, அந்த 3 பேரும் அங்கு வந்து அரிவாளால் வெட்டுவதற்கு உதவி செய்த செல்வதுரை, வான்முத்து, கல்யாணி ஆகிய 3 பேர் என்று 6 பேரினை போலீசார் நேற்று 10.08.2023 அன்று கைது செய்து ரிமாண்ட் செய்துள்ளனர். இந்த 6 பேரில் இரண்டு பேருக்கு 16 வயது, மற்ற நான்கு பேருக்கு 17 வயது. அனைவரும் சிறுவர்கள். அனைவரும் ஆதிக்க சாதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
நான் நேற்று நாங்குநேரி சென்றிருந்தபோது, சுப்பையா, செல்வரமேஷ், சுரேஷ்வானு ஆகிய 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் அவர்கள் சிரித்து பேசி விளையாடிக் கொண்டிருந்தனர். மூன்று சிறுவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என்று ஒருவர் கூட காவல்நிலையத்தில் இல்லை.
இந்த வன்கொடுமை கும்பல் முன்னதாகவே உணவு வாங்கி சாப்பிட்டுவிட்டு இரண்டு சக்கர வாகனங்களில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு அங்கு வந்து அரிவாளால் வெட்டிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பித்து தென்காசி பகுதிக்கு சென்றிருப்பதாகவும் தெரிய வருகிறது. அவர்களது நோக்கம் அப்பட்டமாக சின்னத்துரையை கொல்ல வேண்டும் என்கிற கொலை வெறியில் தான் வந்துள்ளனர். அவர்களது அரிவாள் சின்னத்துரையின் தலைப் பகுதிலும் கழுத்து பகுதியிலும் தான் குறி வைக்கப்பட்டிருக்கிறது. சின்னத்துரை அந்த பதட்டத்திலும் உயிரை காப்பாற்றும் பொருட்டு கழுத்து பகுதியிலும் தலைப் பகுதியும் அரிவாளால் வெட்டப்படாமல் கைகளால் தடுத்திருக்கிறான்.
சுப்பையா, செல்வரமேஷ் ஆகிய இருவரின் நடவடிக்கை குறித்து விசாரித்தோம். பெண் ஆசிரியைகளை கேலி, கிண்டல் செய்வது, வகுப்பில் ஊளையிடுவது, சக மாணவர்களை தாக்குவது, மிரட்டுவது என்று பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு முறை அவர்களுக்கு டிசி கொடுத்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையிலும் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. ஆயினும் அவர்களது குடும்பத்தினர்கள், நாங்கள் இனிமேல் ஒழுங்காக எங்க பசங்களை கண்டித்து வளர்க்கிறோம் என்று உறுதிமொழி கொடுத்தனால் பள்ளி நிர்வாகம் மன்னித்து விட்டிருக்கிறது.
ஆனால், சின்னத்துரையிடம் அவர்கள் நடந்து கொண்ட கொடூரமான நடத்தை அப்பள்ளிக்கூட ஆசிரியர்களிடத்தில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியதனால் அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தனர். இதனை அறிந்து தான் சின்னத்துரையை கொல்ல வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் சாதி நோய் முற்றிப்போய் இத்தகைய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் பள்ளிக்கூடத்தில் சில ஆசிரியர்களுக்கு மிரட்டுகிற தொனியில் அலைபேசி அழைப்புகள் வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த கொடூரமான வன்கொடுமையை கண்டு சின்னத்துரையின் உறவினரும் தாத்தா முறையான கிருஷ்ணன் என்பவர் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போய்விட்டார்.
இந்த கொலை வெறி பிடித்த சிறுவர்களால் அப்பள்ளிக்கூடம் அவமானப்பட்டு நிற்கிறது. திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, பாதிக்கப்பட்ட சின்னத்துரையை சந்தித்திருக்கிறார். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் உறுதியாகவும் இருக்கிறார் என்று தெரிய வருகிறது.
தலித் குடியிருப்பு பகுதிக்குள் வந்து அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு அப்பகுதியில் இருந்து வெளியேறி இருக்கின்ற இந்த போக்கு அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வெவ்வேறு கட்டிடங்களில் முதல் தளத்தில் சின்னத்துரையும் மற்றொரு கட்டிடத்தின் 7வது தளத்தில் சந்திராசெல்வியும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செல்வரமேஷின் பெரியப்பா தி.மு.க.வின் ஒன்றிய செயலாளர். சுப்பையாவின் தாத்தா ம.தி.மு.க.வின் ஒன்றிய செயலாளர். இவர்களது அரசியல் குறுக்கீடு இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என்னிடத்தில் கூறினார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தவிதமான அரசியல் குறுக்கீடும் இல்லாமல் நீதி கிடைக்க உறுதுணையாக இருப்பார் என்று நம்புகிறேன்.
மாணவர்களின் மணிக்கட்டில் கயிறுகளாக இருந்த சாதி இன்று அரிவாளாக மாறியிருக்கிறது. தென் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்கள் சாதி களமாகவே காட்சியளிக்கின்றன. அவை பள்ளிக்கூடங்களாக இல்லாமல் சாதி வன்கொடுமை கூடங்களாக உருமாறி வருவது கவலையளிக்கிறது.
இத்தகைய வன்முறையில் ஈடுபடுகிற குழந்தைகளை குற்றவாளி என்று சொல்லக்கூடாது, சட்டத்திற்கு முரண்பட்டவர்கள் என்று சொல்ல வேண்டும் என்று மனித உரிமை தளங்களில் அறிவுறுத்தப்படுவதும் உண்டு. ஆனால் இதுபோன்ற சாதி நோய் முத்திப்போய் இருக்கக்கூடிய இவர்களுக்கு கவுன்சிலிங் தாண்டி சட்டத்தின் மூலமாக கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
தன் மீது நடந்த கொடுமையை ஆசிரியரிடம் கூறியதற்காக இத்தகைய கொலை வெறியுடன் அரிவாள் தூக்குகிறார்கள் என்றால் இவர்கள் எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள். இந்த சாதி வெறி பிடித்த சிறுவர்களின் நடத்தையை அடுத்த 10 ஆண்டுகளுக்கு அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
சின்னத்துரைக்கும் சந்திராசெல்விக்கும் இது சமத்துவமான சமூக நீதி சார்ந்த சமூகம் என்பதை உணர வைப்பதற்கு கண்டிப்பாக இரண்டு தலைமுறையாவது தேவைப்படும்.
சமூக நீதி என்கிற கருத்தியலை முன் வைத்துக் கொண்டே பிற்படுத்தப்பட்ட சமூக மக்களிடம் தென்படுகிற சாதி தெனாவட்டை திமிரினை கண்டிக்காமல் இது இந்த மண் அந்த மண் என்று உருட்டிக் கொண்டிருந்தால் சமூக நீதிக்கு அதை விட பெரிய துரோகம் வேறு எதுவும் இருந்துவிட முடியாது.
இதை அங்கு இருக்கக்கூடிய குறிப்பாக சமூகநீதியை பேசக்கூடிய இயக்கங்கள் சின்ன பசங்க தகராறு என்று விவாதிப்பதாக அறிய வருகிறேன். எவ்வளவு கேவலமான மனநிலை. சின்னத்துரை நீதிக்காகவும் சந்திராசெல்வி நீதிக்காகவும் யாரெல்லாம் களத்தில் இருக்கிறார்களோ அவர்களே சமூக நீதி போராளிகள். மற்றபடி பெயருக்காக சமூகநீதி பேசுவது பச்சை சந்தர்ப்பவாதம். திருந்துவார்கள் என்று நம்புகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
திருநெல்வேலியில், பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் இடையே சாதி பெருமிதம் மற்றும் சாதி வன்மம் குறித்து டிஜிட்ட கிரியேட்டர் தீபா ஜானகிராமன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “என்னுடைய ஊர் திருநெல்வேலி என்று எத்தனை பெருமையாக சொல்கிறேனோ அதே அளவு சிறுமையும் உண்டு. ஊருக்குள் செல்கிற பேருந்துகளில் வழக்கமாய் உட்காரும் இடத்தில் வேறு சாதி மாணவன் அமர்ந்தால் பள்ளி , கல்லூரி மாணவர்கள் இடையில் நடக்கும் கைகலப்புகளைக் கேள்விபட்டிருக்கிறேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு கொரியன் செட் மொபைல் பிரபலமான காலகட்டத்தில் அவரவர் சாதி பெருமை பேசும் தனிப்பாடல்களை பேருந்தில் அலறவிடுவார்கள். நடத்துனர் உட்பட ஒருவரும் எதிர்த்துக் கேட்க முடியாது. மற்ற இடங்களில் எப்படி என்று தெரியாது, தென்மாவட்டங்களில் ஒரு நடிகரை சடங்கு வீட்டின் போஸ்டர் வரைக்கும் கொண்டு வருகிறார் என்றால், அவற்றில் இருந்து அது எந்த சாதியினர் வீட்டு விசேஷம் என்று தெரிந்து கொள்ள முடியும். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தது தான். வெளிப்படையாகச் செய்வது தான். தொடர்ந்து பல வருட காலங்களாக கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் வெளிப்படையாக சாதி மோதல்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சமத்துவம் பேசும் கட்சிகளுக்கு அப்போது மட்டும் இவர்கள் ஓட்டுபிரிக்கும் வங்கிகளாகத் தெரிவார்கள் போலிருக்கிறது.. மற்றபடி பிரசாரமெல்லாம் மாநகர பொது மேடைகளில் தான். “நாம எந்தக் காலத்துல இருக்கோம்’ என்று தொழில்நுட்ப வசதியைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது தான் அதே தொழில்நுட்பத்தைக் கொண்டு சாதியை வளர்த்து வருகிறார்கள். சில வாட்ஸ்ஆப் குழுவின் பெயர்களை என் நண்பன் சொன்னபோதே எங்கு போய் முடியுமோ என்கிற வேதனை இருந்தது.
நாங்குநேரியில் நடந்த சம்பவம் கொடுமையானது நன்றாகப் படிக்கிறான் என்பதற்காக ஒரு மாணவியும் அவன் தங்கையையும் கொலை செய்யும் அளவுக்கு போகிறார்கள் என்றால் அச்சமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பையன் பள்ளிக்கூடத்துக்கு போக மாட்டேன் என்று வீட்டிலேயே இருந்திருக்கிறான். எத்தனை மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பான். இந்த சம்பவத்தால் குற்றவாளிகளின் தரப்பில் அவர்களைப் பெருமை கொள்ளச் செய்யும் பேச்சுகளும், செயல்களும் இல்லாமல் இருக்க வேண்டும். குற்றவாளிகளை அந்த சாதியின் உதாரண வீரர்களாக மாற்றாமல் இருக்க வேண்டும்.
விமர்சனம் வரும் என்று தெரிந்தே சொல்கிறேன், திருநெல்வேலியில் நான் சந்தித்த அத்தனை பேரிடமும் தன் சாதி குறித்த பெருமையும், கவனமும் உண்டு. நான் மதிக்கும் சிலர் “நீ என்ன ஆளும்மா?” என்று கேட்டுவிட்டுத் தான் என்னிடம் பேசவே தொடங்கியிருக்கிறார்கள். இவர்களில் உயர்கல்வி படித்தவர், சட்டம் தெரிந்தவர், இலக்கியம் பேசுபவர், பேராசிரியர் என உண்டு.
பாதிக்கப்பட்ட அந்த இரண்டு குழந்தைகளும் மீண்டு வரவேண்டும். வேறு என்ன சொல்வது என்று கூட தெரியவில்லை.” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.