பட்டியல் இன அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஷியாம் குமார் (19) என்ற இளைஞர் திருப்பூர் அருகே அமராவதிபாளையத்தில் தான் படித்த அரசு உதவிபெறும் பள்ளியில் ஆண்டுவிழாவில் பங்கேற்க சென்றபோது, அவருடன் படித்த வேறு சமூகத்தைச் சேர்ந்த சக மாணவர் மற்றும் உறவினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ஷியாம் குமார் சிகிச்சைக்காக திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலித் இளைஞர் ஷியாம் குமார், தான் 8-ம் வகுப்பு வைரப் படித்த திருப்பூர் அருகே அமராவது பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் பங்கேற்க முயன்றுள்ளார். அப்போது பள்ளிக்கு அருகே ஷியாம் குமார் உடன் படித்த வேறு சமூகத்தைச் சேர்ந்த சக மாணவர் மற்றும் அவருடைய உறவினர், தன்னை ஆண்டுவிழாவில் கலந்துகொள்ளக் கூடாது, யாரும் உன்னை அழைக்கவில்லை என்று கூறி சாதிவெறியுடன் கொடூரமாகத் தாக்கப்பட்டதாக ஷியாம் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தலித் இளைஞர் ஷியாம் குமார் ஆங்கில செய்தி இணையதளம் ஒன்றுக்கு கூறுகையில், “நான் பட்டியல் இன அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவன். என்னைத் தாக்கியவர்கள் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள்.
நான் கடந்த வெள்ளிக்கிழமை அரை நாள் லீவு போட்டுவிட்டு, அமராவதிபாளையத்தில் நான் படித்த பள்ளிக்கு ஆண்டுவிழாவில் கலந்துகொள்ள வந்தேன். கார்த்திக்கின் உறவினர் பாலசுப்ரமணியம், பள்ளி அருகே நான் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். ஆண்டுவிழாவில் பங்கேற்க வந்திருபதை தெரிவித்தபோது, ஜாதி வெறியை கூறி என்னை அடித்து உதைத்தார்.
இதையடுத்து பாலசுப்ரமணியம் அங்கிருந்து சென்று கார்த்திக்குடன் வந்தார். இருவரும் சேர்ந்து என் வயிறு, மார்பு மற்றும் கழுத்தில் குத்தவும், உதைக்கவும் தொடங்கினர். நான் கதறி அழுதேன், ஆனால், அவர்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லை.” என்று இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஷியாம் குமார் கூறியுள்ளார்.
மேலும், ஷியாம் குமார் பள்ளி ஆண்டுவிழாவுக்கு அழைக்கப்படவில்லை என்றும், ஆண்டு விழாவில் அவர் பங்கேற்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் இருவரும் தன்னிடம் கூறியதாக ஷியாம் குமார் கூறினார். “நான் அந்த இடத்தை விட்டு போக முடியாது என்று கூறியபோது, எனது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியிலோ அல்லது பள்ளியிலோ இருக்கக் கூடாது என்று மிரட்டினர். அவர்கள் தாக்கியதில் காயம் அடைந்த என்னை, எனது நண்பர்கள் வந்து என்னை அந்த இடத்திலிருந்து மீட்டனர்.” என்று ஷியாம் குமார் கூறியுள்ளார்.
“அவர்கள் தாக்கியதில் எனக்கு மார்பு மற்றும் முதுகுக்கு அருகில் உள் காயங்கள் உள்ளன. விரைவில் குணமாகும் என்று மருத்துவர்கள் உறுதியளித்தனர், ஆனால், நான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு எனது நிலை குறித்து நான் கவலைப்படுகிறேன்” என்று ஷியாம் குமார் தெரிவித்துள்ளார்.
தலித் இளைஞர் ஷியாம் குமார், 12-ம் வகுப்பில் தோல்வியடைந்ததால், 2 ஆண்டுகள் ரியல் எஸ்டேட் புரமோஷன் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். அவருடைய தாய் சரஸ்வதி, ஆடை நிறுவனத்தில் தினக்கூலித் தொழிலாளியாகவும் தந்தை விவசாயத் தொழிலாளியாகவும் வேலை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
தலித் இளைஞர் ஷியாம் குமார் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாலசுப்ரமணியம் மற்றும் ஷியாம் குமாரின் முன்னாள் பள்ளி மாணவர் கார்த்திக் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருப்பூர் அருகே தலித் இளைஞர் ஷியாம் குமார் மீதான தாக்குதல் சம்பம் குறித்து ஆதி தமிழர் ஜனநாயக பேரவை தலைவர் கே.பௌத்தன், “பொதுவாக இந்த பகுதிகளில் தலித்துகள் மீது வெறுப்பு இருக்கிறது. ஒரு தலித் நல்ல சட்டை அணிந்தாலோ அல்லது பைக் ஓட்டினாலோ அவர்களை ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சும்மா விடமாட்டார்கள். தவிர, பெரும்பாலான அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளனர்.” என்று கூறினார்.
மேலும், தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வதில் கால தாமதம் ஏற்படுவதாக பௌதன் சுட்டிக்காட்டினார். “அவர்கள் இந்த வட்டாரத்தில் செல்வாக்கு மிக்க நபர்கள், எனவே அவர்கள் இன்னும் சுதந்திரமாக உலாவுகிறார்கள்” என்று கே. பௌத்தன் கூறினார்.
தலித் இளைஞர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து, போலீஸ் உதவி கமிஷனர் (நல்லூர்) கே. நந்தினி கூறுகையில், “குற்றவாளிகளை அடையாளம் கண்டு, அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம். நாங்கள் தேர்தல் பணியில் மும்முரமாக இருப்பதால் இன்னும் அவர்களை கைது செய்யவில்லை. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.