கஜ புயல் கரை கடந்த பின்பும் அது விட்டு சென்ற தாக்கம் இதுவரை குறையவில்லை. கஜ புயலால் கலங்கி நிற்கும் வேதாரண்யம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் புயல் சேதத்தை கணகெடுக்கும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. நாகப்பட்டினத்தில் உயிர் பலி மட்டும் 23 ஆக உயர்ந்துள்ளது.
கஜ புயல் மீட்புப் பணி :
கஜ புயலால் தாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 471 முகாம்களில் இதுவரை சுமார் 81,948 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலரும் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றன. வங்க கடலில் கடந்த 11-ந் தேதி உருவாகி தமிழகத்தை அச்சுறுத்திக்கொண்டிருந்த கஜ புயல், நேற்று காலை கரையை கடந்தது.
இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் நேற்று முன்தினம் மாலை முதலே மழை பெய்ய தொடங்கியது.புயல் கரையை கடந்தபோது, நாகப்பட்டினம், காரைக்கால் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கடற்கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏராளமான படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன. பல படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. சில படகுகள் கவிழ்ந்தும், சில படகுகள் தூக்கி வீசப்பட்டும் நாசமாயின.
புயல்-மழையால் நாகை மாவட்டத்தில் மிக அதிக அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது. இந்த புயல் சேதத்தில் இருந்து பொதுமக்களை மீட்க தமிழக அரசு, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவ திருச்சபைகளும் மீட்பு பணியில் செயல்பட்டு வருகின்றனர்.
கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கிறிஸ்துவ திருச்சபைகள் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து களப்பணியில் ஈடுப்பட்டு வருகின்றன.