க.சண்முகவடிவேல்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு ஊராட்சி பர்மா காலனியில் இடி விழுந்ததில் பல வீடுகளில் டிவி,பேன் எலக்ட்ரானிக் பொருட்கள் என பல லட்சம் பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் இதற்கு நிவாரணம் வழக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
திருவெறும்பூர் அருகே உள்ளது நவல்பட்டு ஊராட்சி இங்கு உள்ள பர்மா காலனி. இந்த பகுதியில் நேற்று முன்தினம் கனத்த இடி இடித்தது சற்று நேரத்தில் பலத்த மழையும் பெய்ய தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி முழுதும் மின்சாரம் தானாக துண்டிக்கப்பட்டது.
இதில் பர்மா காலனி பகுதியில் இருபத்தி ஒன்றாவது தெருவில் அருகே உள்ள ஆற்றங்கரை ஐடி பார்க் செல்லும் சாலையில் லட்சுமிநாராயணன் காம்ப்ளக்ஸ் அருகில் உள்ள தென்னை மரத்தில் இடி விழுந்ததால் உயர் மின் அழுத்தம் காரணமாக காம்ப்ளக்ஸில் உள்ள டிவி, ஃபேன் மீட்டர் பாக்ஸ், குடிநீர் மோட்டார், அருகிலுள்ள 17,18,19,20, 21,22,ஆகிய தெருக்களில் வசித்து வரும் நூற்றுக்கணக்கான வீடுகளில் உள்ள டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட எலக்ட்ரிக், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதன் மதிப்பு பல லட்சங்கள் ஆகும்.
இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் தனலட்சுமி என்பவர் கூறுகையில்
இப்பகுதியில் திடீரென இடி விழுந்ததால், நூற்றுக்கணக்கான வீடுகளில் பல லட்சம் மதிப்புள்ள டிவிக்கள் பழுதாகி இனி அதனை யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் வாஷிங் மெஷின் பிரிட்ஜ் ஸ்விட்ச் பாக்ஸ் மீட்டர் பாக்ஸ் ஆகியவையும் பழுதடைந்து விட்டது. இடி விழுந்த பகுதியில் அருகில் உள்ள சுமார் 5 தெருக்களில் உள்ள வீடுகள் இதனால் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளோம். அரசு எங்களது பாதிப்பிற்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டுகிறோம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் இடி மின்னலுடன் கூடிய கனமழையால் திருவெறும்பூர் பகுதியில் உள்ள பலரது வீட்டிலும் லட்சக்கணக்கான எலக்ட்ரிக் சாதனங்கள் செயலிழந்தது அந்தப்பகுதியில் வாழும் சாமானிய மக்களை பெரும் துயருக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil