New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/09/WhatsApp-Image-2022-09-13-at-8.50.56-AM.jpeg)
விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரிசெய்யும் வகையில் சில சாலைகளை ஒருவழிப்பாதையாகவும், இலகுரக வாகனங்கள் மட்டும் செல்லக்கூடிய வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில், ராஜா காலணியிலிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு செல்லக்கூடிய பகுதியில் கனரக வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்காக இரும்பிலான தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. அதில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டிருந்தது.
இதனால் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் சென்று கொண்டிருந்தன. நாளடைவில் அந்த கண்காணிப்பு கேமராவும் பழுதடைந்து காணாமல் போய்விட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மினி லாரி அந்த வழியாக சென்றபோது அந்த தடுப்பை இடித்து தள்ளி விட்டு வேகமாக சென்றது. இதனால் அந்த தடுப்பு உடைந்து சாலையில் பாதியாக விழுந்தது. இதுகுறித்து அங்கிருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் போக்குவரத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து இந்த தடுப்பை இடித்து தள்ளிய வாகனத்தின் பதிவு எண்ணை கொடுத்தனர்.
இந்த நிகழ்வு ஏற்பட்டு நான்கு நாட்கள் ஆகியும் கீழே விழுந்து கிடக்கும் தடுப்பை அகற்றாமல் போக்குவரத்து காவல்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்து ஏற்படாமல் தடுக்க உடனடியாக அதை சரிசெய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏற்கனவே இச்சாலை வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு விரைவாக இருசக்கர வாகனங்கள் செல்லும். ஆனால் இச்சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று குழிகளாக உள்ளது.
இரவு நேரத்தில் பள்ளங்களை கடந்து இச்சாலைக்கு வரும் பொழுது இந்த தடுப்பு சாய்ந்து இருப்பது யாருக்கும் தெரியாது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறுவதற்கு முன்னதாக போக்குவரத்து காவல்துறையினர் இதனை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.