சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைதான தஷ்வந்த், தனது தாயாரை கொன்று நகை, பணத்துடன் தப்பி ஓடிவிட்டான். அவனை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சராளா. அவர் இன்று மதியம் வீட்டில் இறந்து கிடந்தார். அவர் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய காயம் இருந்தது. அவரது வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.
அவரும், மகன் தஷ்வந்தும் தான் வீட்டில் இருந்தனர். மதியம் சரளா இறந்து கிடந்த போது அவரை காணவில்லை. அவருடைய செல்போனும் சுவிட்ச்ட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இந்த கொலையை தஷ்வந்தே செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
யார் இந்த தஷ்வந்த்?
இந்த பெயரை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. இதே மாங்காடு பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் ஹாசினி என்ற சிறுமி காணாமல் போனார். விளையாடச் சென்ற சிறுமி வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் அவரை பல இடங்களிலும் தேடினார்கள். எங்கும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து குழந்தையை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்தனர். போலீஸ் விசாரணையில் பக்கத்து வீட்டு வாலிபரான தஷ்வந்துடன் சிறுமி ஹாசினி சென்றாது தெரியவந்தது. உடன் போலீசார் தஷ்வந்தை பிடித்து விசாரித்தனர். முதலில் அவர் மறுத்த போதிலும் போலீஸ் விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டார்.
‘சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தேன். அப்போது அவள் மயங்கிவிழுந்துவிட்டாள். அவள் கண்விழித்தால் என்னைக் காட்டிக் கொடுத்துவிடுவாளோ என்ற பயத்தில் பெட்ரோல் உற்றி எரித்து கொன்றுவிட்டேன்’ என போலீசில் தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் தொடர்பாக போலீசார் கோர்ட்டில் சரியான விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து நீதிபதி குண்டர் சட்டத்தை ரத்து செய்தார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் அவர் ஜாமீன் பெற்று சமீபத்தில்தான் வீடு திரும்பினார்.
இந்நிலையில் அவரின் தாயார் படுகொலை செய்யப்பட்டு வீட்டில் கிடக்கிறார். நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எனவே தஷ்வந்த் தாயை கொன்று பணம் நகையை கொள்ளையடித்துவிட்டு தலைமறைவாகியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, ஹாசினியின் பெற்றோர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹாசினியின் தந்தையை, வழக்கை தொடர்ந்து நடத்தினால், உன் மகனையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து ஹாசினியின் பெற்றோர்கள் வீட்டை காலி செய்துவிட்டு, வேறு இடத்துக்குச் சென்றுவிட்டனர்.