மக்களவை பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் கட்சித் தலைமை அலுவலகத்தில் வரும் 14-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்களவை பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் கட்சித் தலைமை அலுவலகத்தில் பிப்.4 முதல் 10-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், விருப்ப மனு விநியோகம் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, மாதவரம் மூர்த்தி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், வடசென்னை மாவட்டச் செயலாளர் ராஜேஷ், முன்னாள் எம்எல்ஏ ராஜலட்சுமி ஆகிய 5 பேருக்கு விருப்ப மனுக்களை வழங்கி தொடங்கி வைத்தனர்.
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோரும் விருப்ப மனு பெற்றனர். விருப்ப மனுவில் மொத்தம் 25 கேள்விகள் உள்ளன. பிப்.10-ம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்க அவகாசம் வழங்கப்பட்டது. இதுவரை 1000 அ.தி.மு.க உறுப்பினர்கள் தங்களது விருப்ப மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில், வரும் 14-ம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க விருப்ப மனு வழங்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
