பிஎஸ்என்எல் வழக்கு: கலாநிதி மாறன், தயாநிதி மாறன் நேரில் ஆஜராக உத்தரவு!

குற்றச்சாட்டு பதிவுக்கு முன்னர் நீதிமன்றம் இதில் ஒரு முடிவு எடுக்க வேண்டும்

By: January 28, 2019, 3:20:10 PM

சட்டவிரோத பி.எஸ்.என்.எல் வழக்கில் வரும் 30 ஆம் தேதி கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் நேரில் ஆஜராக சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் கடந்த 2004 முதல் 2007 பதவி வகித்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர், கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் தொலைக்கட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதி விரைவு தொலைபேசியின் 700 க்கும் மேற்பட்ட இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தச் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக உச்சநீதிமன்றத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி வழக்கு தொடர்ந்தார்.இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தொலைபேசி இணைப்பு முறைகேடு புகார் குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

அதன்படி, 2011 ஆம் ஆண்டு இது தொடர்பான விசாரணை தொடங்கி 23 ஜூலை 2013 ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

முறைகேடுகளில் ஈடுபட்டதாக 2007 ஆம் ஆண்டில் சென்னை பி.எஸ்.என்.எல்லின் பொது மேலாளராக இருந்த கே.பி.பிரம்மநாதன் (K.B.Brahmadathan) அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த வேதகிரி கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், சன் தொலைக்காட்சி எலக்ட்ரீஷியன் ரவி, சன் தொலைக்காட்சி தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது டெல்லி சிபிஐ போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு (வழக்கு பதிவு) செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிபிஐ போலீஸார் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அந்த குற்றபத்திரிக்கையில், 2004 முதல் 2007 ஆம் ஆண்டு கால கட்டம் வரை மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சென்னை பி.எஸ்.என்.எல்லில் இருந்து, கோபாலபுரம் , போட் கிளப் சாலையில் இருக்கும் தனது வீடுகளுக்கு கேபிள் பதிக்க அனுமதி பெற்று அதிவேக உயர் தொலைபேசி இணைப்புகளை தனது சகோதரர் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு முறைகேடாக வழங்கியுள்ளார். இதன் மூலம் அரசுக்கு 1,78,71,391 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என அந்த குற்றபத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரில் குற்றவாளிகள் அனைவரும் கூட்டு சதி, மோசடி ஆவணங்கள் தயாரித்தல், உள்ளிட்ட சட்டபிரிவின் கீழ் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கபட்டுள்ளது.இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

மேலும் இந்த வழக்கில் கடந்த 2017 ஜூலை மாதம், குற்றஞ்சாட்டப்பட்ட, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கும் குற்றபத்திரிக்கை நகல் வழங்கபட்டது.

இதனையடுத்து விசாரணை நீதிமன்றமான சென்னை 14 ஆவது சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன் சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக கடந்த ஆண்டு (2018) ஆகஸ்ட் 30 ஆம் தேதி
குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்தும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 5 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மாறன் சகோதரர் உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும், விசாரணை நீதிமன்ற குற்றச்சாட்டு பதிவை முறையாக மேற்கொள்ளாததால், மீண்டும் அனைவருக்கும் எதிராக புதிதாக குற்றச்சாட்டு பதிவு செய்ய சிபிஐ நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும், அதன் பிறகு குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் தங்களுக்கு எதிரான வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து குற்றஞ்சாட்டப்பட்ட கண்ணன், ரவி ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யபட்டது.

அந்த வழக்கை விசாரித்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யலாம் எனவும் இருப்பினும் அனுமானத்தின் அடிப்படையிலும், உயர்நீதிமன்ற உத்தரவையும் கருத்தில் கொள்ள தேவையில்லை என உத்தரவிட்டார்.

இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர். வசந்தி முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட கண்ணன், ரவி தரப்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர்கள், மீண்டும் புதிதாக ஆவணங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு மேற்கொள்ள வேண்டும் என்ற நீதிமன்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமே செய்ய வேண்டும். அனுமானத்தின் அடிப்படையிலும் போதிய ஆவணங்கள் இல்லாமலும் குற்றச்சாட்டு பதிவை மேற்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளது. எனவே ஏற்கனவே விசாரணை நீதிமன்றமான சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கு போதுமான ஆவணங்களாக இல்லை. எனவே சிபிஐ நீதிமன்ற அவற்றை நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக இந்த வழக்கில் 7000 கொண்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் ஏழாவது குற்றவாளியாக உள்ள கலாநிதி மாறனுக்கு எதிராக ஒரு இடத்தில் கூட அவரின் பெயர் இல்லை அவருக்கு எதிரான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் இல்லை. எனவே இதனை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். எனவே போதுமான ஆதாரங்கள் இல்லாமல் குற்றப்பத்திரிகை பதிவு செய்யக் கூடாது எனவும் வாதிட்டனர்.

வழக்கில் இருந்து விசாரணை நீதிமன்றமான சிபிஐ நீதிமன்றம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கிலிருந்து குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவிக்க முடியாது எனவும் அவர்களுக்கு எதிரான ஆவணங்கள் இருப்பதாகவும் தெரிகிறது ஆனால் உச்சநீதிமன்றம் அது போன்ற ஆவணங்கள் இல்லை என கருத்து தெரிவித்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை விசாரணை நீதிமன்றம் கருத்தில்கொள்ள வேண்டும் வலியுறுத்தி வாதிட்டனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்ரகளுக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர்களுக்கு பதில் அளித்து வாதிட்ட சிபிஐ தரப்பு வழக்கறிஞர், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் இருப்பதாகவும் எனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களை அதிகப்படியாக உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது அதனை இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மனுதரார்கள் திரும்ப, திரும்ப ஆதாரங்கள் இல்லை ஆவணங்கள் இல்லை என தெரிவித்து வருவதாகவும் இதில் உண்மையிலை எனவும் அது தவறு எனவும் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பில் ஆவணங்கள் இல்லை எனவும் சிபிஐ தரப்பில் ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது எனவே குற்றச்சாட்டு பதிவுக்கு முன்னர் நீதிமன்றம் இதில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி ஆர்.வசந்தி, இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்கு (மீண்டும் புதிதாக) வழக்கின் விசாரணை வரும் 30 ஆம் தேதி (ஜனவரி 30) தள்ளிவைப்பதாகவும் அன்று இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கோரிக்கை அன்று பரிசீலிக்கபடும் என தெரிவித்த நீதிபதி வழக்கின் விசாரணை ஜனவரி 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Dayanidhi maran brother kalanithi illegal telephone exchange case

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X