மத்திய சென்னையில் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக் கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு எதிராக அந்த தொகுதி எம்.பி தயாநிதி மாறன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பழனிசாமி பேசியதாக மனுவில் குற்றஞ்சாட்டி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய சென்னை தொகுதி எம்.பியும், மத்திய சென்னை தி.மு.க வேட்பாளருமான தயாநிதி மாறன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி இருந்தார். தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், இ.பி.எஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு எதிராக தயாநிதி மாறன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பழனிசாமி பேசியதாக மனுவில் குற்றச்சாட்டி உள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், "தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என அவதூறு ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்காததால் நீதிமன்றத்தில் இ.பி.எஸ் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். 95% மேல் எனது தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிட்டுள்ளேன். சுமார் ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதில் ரூ.17 லட்சத்தை தவிர எல்லா தொகைகையும் மத்திய சென்னை தொகுதிக்கு செலவிட்டுள்ளேன். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14-ம் தேதி விசாரணைக்கு வருகிறது" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“