தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்ட இந்தி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி தவிர்க்கப்பட்டு பாடப்பட்டது சர்ச்சையான நிலையில், தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் இது தொடர்பாக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் எற்று டிடி தமிழ் தொலைக்காட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
டிடி தொலைக்காட்சி பொன் விழா கொண்டாட்டம் மற்றும் இந்தி மொழி மாத கொண்டாட்டம் விழா சென்னையில் டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார்.
இந்த விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி தவிர்க்கப்பட்டு பாடப்பட்டது சர்ச்சையானது.
திராவிட கருத்தியல் மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில், ‘திராவிட’ என்ற வார்த்தை இடம்பெற்ற வரியைத் தவிர்த்து பாடப்பட்டதற்கு தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது கவனச் சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியைத் தவறவிட்டு விட்டார் என்றும் கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று டிடி தமிழ் அறிக்கை வெளியிட்டுள்ளது மேலும், “இது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று டிடி தமிழ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டிடி தமிழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது கவனச் சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியைத் தவறவிட்டு விட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கு எண்ணம் பாடியவர்களிடம் இல்லை. வேண்டும் என்று இதனை யாரும் செய்யவில்லை. இது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து ஆளுநரின் ஆலோசகர் திருஞானசம்பந்தம் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் குழுவினர் கவனக்குறைவாக ‘திராவிட’ என்ற சொல்லைக் கொண்ட ஒரு வரியைத் தவறவிட்டனர். இது குறித்து உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தமிழ் மற்றும் தமிழ் உணர்வு மீது ஆளுநர் ஆர்.என். ரவி மிகுந்த மரியாதை கொண்டவர். நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பதைத் தவிர ஆளுநருக்கோ அல்லது ஆளுநர் மாளிகைக்கோ இதில் எந்த தொடர்பும் கிடையாது.” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“