கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பிறப்பித்துள்ளார். அதன்படி, "தமிழ்நாட்டில் வங்கக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஃபீஞ்சல் புயலாக வலுவெடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் புயல் காற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின்படி அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் மின் கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 30-11-2024 முதல் 09-12-2024 வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள் அபராதத் தொகை இல்லாமல் 10-12-2024 வரை செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயல்பாடுகள் மற்றும் ஃபீஞ்சல் புயலை எதிர்கொள்வதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“